தமிழகம்

‘லிங்க’ புள்ளி vs ‘கண் ஃபாதர்’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கடலோர மாவட்ட சூரியக் கட்சியில் யாருக்கு ‘மாண்புமிகு’ பட்டம் சூட்டுவது என்பதில் மாவட்டத்தின் முதன்மை ‘லிங்க’ புள்ளிக்கும் ’கண் ஃபாதருக்கும்’ கடந்த தேர்தல் சமயத்திலேயே கலகம் வெடித்தது. கட்சியின் புதிய வரவான ‘கண் ஃபாதர்’ கவனிக்க வேண்டியவர்களைக் ‘கவனித்து’ கருத்துகளை கச்சிதமாகக் ‘கவர்ந்து’ சீட்டைப் பிடித்தார்.

அடுத்த கட்டத்துக்கும் அதே ரூட்டில் பயணித்து நம்மை, நாசூக்காக ‘நகரப் பேருந்தில்’ ஏற்றிவிடுவார் என கணக்குப் போட்ட ‘லிங்கப்’ புள்ளி, வேட்பு மனு தாக்கல் சமயத்திலேயே ‘கண் ஃபாதருக்கு’ எதிராக சண்டித்தனம் செய்தார்.

          

அதையெல்லாம் சமாளித்து சாதிய பின்னணியாலும், ‘கவனிப்பு’ உத்திகளாலும் ‘குளத்தூர்’ வென்ற ‘கண் ஃபாதர் கட்சிக்குள் வந்த ரூட்டையே ‘கணக்காய்’ பிடித்து ‘மாண்புமிகு’ மகுடத்தையும் சூட்டிக் கொண்டார். இதனால், வெந்து தணிந்த காடாகிப் போன ‘லிங்கப்’ புள்ளி, இன்றைய தேதி வரைக்கும் ’கண் ஃபாதருடன்’ கரா முரா கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில், வட்டார அதிகாரி ஒருவரை சாதியின் பெயரால் சாடியதாக சர்ச்சையில் சிக்கினார் ‘கண் ஃபாதர்.

அப்போது அந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி விட்டதே ‘லிங்கப்’ புள்ளியின் தங்கத் தம்பிகள் என்ற பேச்சுக் கிளம்பியது. இந்த சர்ச்சையிலிருந்து ‘கண்ஃபாதரைக்’ காப்பாற்ற நினைத்த கட்சி தலைமை, அவரை இலாகா மாற்றி உட்காரவைத்தது.

அந்த அளவுக்கு தலைமையிடம் அவருக்கு செல்வாக்கு இருப்பதைப் புரிந்து கொண்ட ‘லிங்கப்’ புள்ளி, அதன் பிறகு சற்றே அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் அண்மையில் முதன்மையானவர் அந்த மாவட்டத்துக்கு விசிட் அடித்த போது, ‘கண் ஃபாதரின்’ பெயரைச் சொல்லி சிலர் ஒழிக கோஷம் போட்டு மீண்டும் அவருக்கு சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறார்கள்.

இதன் பின்னணியிலும் ‘லிங்கப்’ புள்ளி தரப்பின் கைங்கர்யம் இருப்பதாக தலைமையின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறாராம் கடமையே ‘கண் ஃபாதர்’.

SCROLL FOR NEXT