தமிழகம்

தூங்கா நகர அண்ணனின் கைவிரிப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

தூங்காநகரத்தில் ‘அண்ணனுக்கு’ நெருக்கமாக இருந்து அரசியல் செய்த ‘தம்பிகள்’ சிலர், ‘பெரியவர்’ இருக்கும் போதே கூண்டோடு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் “மீண்டும் எங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என தலைமைக்கு அப்ளிகேஷன்களை போட்டுப் போட்டு களைத்துப் போய்விட்டார்கள்.

இவர்களை சேர்த்துக் கொள்ள தலைமை ஓகே சொன்னாலும் ‘சின்னவர்’ அப்ஜெக்‌ஷன் சொல்கிறாராம். இதனால் வெறுத்துப் போனவர்கள், “இப்படியே எங்களது அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்க வேண்டியது தானா” என ’அண்ணனிடம்’ போய் முறையிட்டுள்ளனர்.

அதில் சிலர், “பனையூர் கட்சியில கூப்புடுறாங்க. உங்களுக்காகத்தான் நாங்க யோசிக்கிறோம்” என்று வருத்தமான வார்த்தைகளை உதிர்த்தார்களாம். அதற்கு, “நான் இனிமே அரசியலுக்குள்ள வரப்போறதில்லை... உங்களுக்கு அப்படியொரு ஆப்ஷன் இருக்குன்னா தாராளமா போயிடுங்கப்பா” என்று சொல்லி ‘அண்ணன்’ கைகூப்பினாராம்.

இதையடுத்தே ‘குன்றத்து’ கார்த்திகைப் புள்ளி அண்மையில் பனையூர் கட்சியில் ஐக்கியமானாராம். ‘அண்ணனும்’ குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அரசியல் தலைவர் கொலை வழக்கில் முக்கிய இடத்தில் இருந்த இவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் பனையூர் கட்சிக்கு போகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி கிளம்புகிறவர்கள், “நம்ம, இனிமே எம்எல்ஏ, எம்பி-க்கு நிக்கப் போறதில்ல. கவுன்சிலர் சீட்டையாச்சும் கரெக்ட் பண்ணிக்கலாம்ல” என்று பேசிவைத்துக் கொண்டே பெட்டி மாறுகிறார்களாம்.

SCROLL FOR NEXT