தமிழகத்துக்கு வெளியே இருக்கும் கதர் கட்சி தலைவர்களில் சிலர், இன்னமும் பனையூர் கூட்டணிக்கு தூபம் போட்டுக் கொண்டே இருக்கிறார்களாம். அதேசமயம், சூரியக் கூட்டணியே சேஃப் என நினைக்கும் தமிழகத்து கதர் தலைவர்கள் சிலர் சூரியக் கட்சி தலைமை மூலமாகவே டெல்லிக்குப் பேசி இப்போதுள்ள கூட்டணியை உறுதிப்படுத்துவதில் சிரத்தையாக இருக்கிறார்களாம்.
இதனிடையே, காம்ரேட் கட்சியில் இருக்கும் ‘எழுத்தாளர்’ ஒருவரும் கதர் கட்சியை பனையூர் பக்கம் திருப்பி விடுவதில் கவனமாக இருக்கிறாராம்.
கதர் கட்சி அந்தப் பக்கம் காரைத் திருப்பினால் நம்முடைய தோழர்களையும் சூரியக் கட்சி பந்தத்தை விட்டு பிரித்து அந்தப் பக்கம் கொண்டு போய்விடலாம் என நினைக்கும் அந்த ‘எழுத்தாளர்’, பனையூர் கட்சியின் செல்வாக்கு குறித்து டெல்லி கதர் தலைவர்களுக்கு ‘பூஸ்டர்’ செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறாராம்.
இதனிடையே, சூரியக் கட்சியைவிட்டு தாங்களாக பிரிந்து வரமுடியாத சூழல் இருப்பதை கதர் கட்சி தலைவர்கள் சிலர் பனையூர் தலைவரின் படைத் தளபதிகளிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னார்களாம். அதற்கு அவர்கள், “அதைப் பற்றி எல்லாம் யோசிக்காதீங்க... 40 சீட்டும் ஆட்சியில் பங்கும் கேளுங்க. அவங்களாவே உங்கள வாழ்த்தி வழியனுப்பிருவாங்க” என்று அருமையான யோசனையும் சொல்லி வைத்திருக்கிறார்களாம்.