தமிழகம்

புதல்வரை வைத்து புதுக்கணக்கு போடும் ‘மலர்ச்சி’ தலைவர் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

“கூட்டணியில் இருந்துகொண்டே சிலர் குண்டு வைக்கிறார்கள். நாங்கள் தான் வாகைக் கட்சியை வாய்த்துடுக்காய் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ‘மலர்ச்சி’ தலைவர், தன்னைப் போலவே ‘புரட்சியாகப்’ பேசும் புதல்வரை வைத்து புதுக்கணக்கு ஒன்று போடுகிறாராம்.

புதல்வர் என்னதான் சுல்தான் பேட்டைப் பக்கம் போக்குவரத்துமாய் இருந்தாலும் ‘தாக நீர் லேது’ தானாம். அதனால் மாநிலத்தில் தங்களுக்கென மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மலர்ச்சித் தலைவருக்கு நெருடலாகவே இருக்கிறதாம். அதனால் எப்படியாவது வாகைக் கட்சியிடம் பேசி, மலைக்கோட்டை மாநகர் ஈஸ்டில் மகனுக்கு சீட் வாங்க மெனக்கெடுகிறாராம்.

தனது எண்ணம் ஈடேறி மகனுக்கு வாய்ப்புக் கிட்டுமானால் அப்படியே தங்களுக்கான கோட்டாவில் மகனை மாண்புமிகு இருக்கையில் அமர்த்திவிடலாம் என்பதும் தலைவரின் தொலைநோக்கு என்கிறார்கள். மாநிலத்தில் அப்படியான அதிகாரம் இருந்தால்தான் கட்சியை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தமுடியும், ஆங்காங்கே இருக்கும் கட்சியின் சொத்துகளை பக்கா பண்ணமுடியும் என நினைக்கிறாராம் ‘மலர்ச்சி’ தலைவர்.

அதற்காகத்தான் அழையா விருந்தாளியாக ஆங்காங்கே அவதாரம் எடுத்து வாகைக் கட்சியினரே கூச்சப்படும் அளவுக்கு காது புடைக்க கனல் தெறிக்கிறாராம். மலைக்கோட்டை மீது தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை அரசல்புரசலாக வாகைக் கட்சியின் ‘குலுக்கல்’ மாப்பிள்ளையிடம் ‘மலர்ச்சி’ தலைவர் தரப்பில் தெரிவித்தார்களாம்.

அதற்கு அந்தத் தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லையாம். அதற்கே இந்தத் ’தாக்குத் தாக்கும்’ மலர்ச்சித் தலைவர், ஒருவேளை மகனுக்கு சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டால் தெருத் தெருவாய் கிளம்பியே விடுவார் போலிருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT