‘மஞ்சள்’ மாவட்டத்தில் மாண்புமிகு ஒருவரின் அண்ணனும் தம்பியும் அடிக்கும் கொட்டத்தைத் தாங்கமுடியவில்லை என்று மக்கள் புலம்பித் தவிக்கிறார்கள். தொட்டது அனைத்திலும் ‘துலாபாரம்’ கேட்கும் இந்த ப்ரோக்களின் ‘வசூல் வைபவங்கள்’ குறித்து உளவுத் துறை வரைக்கும் விசாரணை நடத்தப்பட்டு அது மாண்புமிகுவானவரின் காதுவரைக்கும் போன பிறகும் அண்ணன் - தம்பியின் ஆட்டம் அடங்கவில்லையாம்.
மஞ்சள் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தனியார் கேண்டீன் ஒன்றைத் திறந்தார்கள். சூரியக் கட்சி ஆட்சியில் இந்த கேண்டீனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். ஒதுக்கீடு பெற்றவர் கொஞ்சம் தாமதமாக அண்மையில் கேண்டீனைத் திறந்திருக்கிறார்.
எப்படியோ இதன் உள்விவகாரங்களை மோப்பம் பிடித்துவிட்ட அண்ணனும் தம்பியும் கேண்டீன் உரிமையாளரைக் கூப்பிட்டு வைத்து சாந்தமாக ’டீல்’ பேசினார்களாம். தங்களுக்கு மாதம் 5 லகரம் தந்துவிட வேண்டும் என்பதுதான் அண்ணனும் தம்பியும் கொடுத்த ஆஃபராம். ஆனால், “அவ்வளவு கொடுத்தெல்லாம் கேண்டீனை நடத்தமுடியாதுங்க” என்று கேண்டீன் உரிமையாளர் பரிதாபக் குரலில் இழுத்தாராம்.
அவர் தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரமாட்டார் என்று தெரிந்ததும், “நடக்குறது எங்க ஆட்சி. சூரியக் கட்சி ஆட்சியில அலாட்மென்ட் வாங்கிட்டு நீங்க எப்படி கேண்டீனை நடத்த முடியும்?” என்று கொஞ்சம் சூடாக கேட்டுவிட்டு கேண்டீன் உரிமையாளரை வழியனுப்பி வைத்தார்களாம்.
பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்போது கேண்டீன் இழுத்து மூடப்பட்டு, ‘கேண்டீன் தற்காலிகமாக மூடப்படுகிறது’ என்று வாசலில் வாகைக் கட்சி கலரிலேயே பெரிதாக பேனரைக் கட்டி வைத்திருக்கிறார்கள். கேண்டீன் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர் மாத்திரமல்லாது மருத்துவமனைக்கு வழக்கமாக வரும் மக்களும் ரொம்பவே சங்கடப்பட்டுப் போயிருக்கிறார்கள்.