தமிழகம்

கதர் கட்சியில் நியமனங்களுக்கு பின்னால்... | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கதர் கட்சியில் மாவட்ட வாரியாக மண்டலத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் நியமனங்கள் ஜரூராக நடக்கிறது. அனைத்து மாவட்டங்களுக்கான நியமனங்கள் முடிவுற்றதும் ஜனவரியில் புதிய பொறுப்பாளர்கள் இளம் தலைவரை சந்திக்கும் நிகழ்ச்சியும் இருக்கிறதாம். வழக்கமாக வட்டார தலைவர் நியமனங்களில், செல்வாக்கான தலைகள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு ’தோதான’ நபர்களை டிக் அடித்து விடுவார்கள். ஆனால், இம்முறை இந்த நியமனங்களில் வயது வரம்பு உள்ளிட்ட ஏகப்பட்ட விதிகளை புகுத்தி இருக்கிறதாம் தேசியத் தலைமை.

இதனால் உண்மையாகவே கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள்தான் உள்ளே வரமுடியுமாம். இந்த நிலையில், சீமை மாவட்டத்துக்கான வட்டார, மண்டல தலைவர்கள் நியமனங்கள் தொடர்பாக தீபாவளி முடிந்த சூட்டுடன் பவன் அலுவலகத்தில் கமிட்டி கூடியதாம். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை வாரிசு எம்பி-யும் அவரது தகப்பனாரும் முடிவு செய்பவர்கள் மட்டுமே முக்கிய பதவிகளுக்கு வரமுடியும்.

மாவட்ட தலைவர் நியமனமே அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. ஆனால், இம்முறை நிலைமையே வேறு. வாரிசு எம்பி-யால் பல்வேறு காலகட்டங்களில் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட பலரும் இப்போது மொத்தமாக படை திரட்டிக் கொண்டு பதவிக்கு மோதுகிறார்களாம்.

விட்டால், இவர்களெல்லாம் வந்தாலும் வந்துவிடுவார்களோ என்ற கலக்கத்தில், கமிட்டிக் கூட்டத்தில், “தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை பார்த்த 10 பேர் மீது அகில இந்திய தலைமையில் புகார் அளித்திருக்கிறேன். அதற்கு ஒரு முடிவு தெரியாமல் வட்டார, மண்டல தலைவர்களை நியமிக்கக் கூடாது” என தர்க்கம் செய்துவிட்டு வெளிநடப்பு செய்தாராம் வாரிசு எம்பி.

தனக்கு எதிராக வேலை பார்த்ததாக, ராமருக்கு சாமியான கட்சியின் நடவடிக்கை குழு பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீதுதான் எம்பி புகார் செய்திருக்கிறாராம். அதேசமயம், அப்பாவையும் பிள்ளையையும் ஓரங்கட்டிவிட்டு இம்முறை, வாரிசு எம்பி-க்கு எதிராக கச்சைகட்டும் ஆட்களைப் பொறுப்புகளில் அமர்த்திவிட வேண்டும் என ரொம்பவே மெனக்கிடுகிறாராம் ராமருக்கு சாமியானவர்.

அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே ‘வெளிநடப்பு’ வேகம் காட்டினாராம் வாரிசு எம்பி. அன்றைய கமிட்டி கூட்டத்துக்கு வராமல் வாரிசு எம்பி-யின் விசுவாச வட்டத்தில் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் 8 பேரும் புறக்கணித்தார்களாம்.

இவர்கள் என்னதான் புறக்கணிப்பு, வெளிநடப்பு சீன்களைப் போட்டாலும் அடுத்த கூட்டத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் தகுதியான நபர்களை வட்டார, மண்டலத் தலைவர்களாக நியமித்துவிட்டுப் போய்விடுவார் ஜெட் வேகத்தில் செயல்படும் ‘ஜெம்’ தலைவர் என்கிறார்கள் சீமை மாவட்டத்தில் இருக்கும் வாரிசு எம்பி-யின் ‘பிரியமான’ எதிரிகள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT