தூங்கா நகரத்தின் தூய்மைப் பணிகளைக் கவனிக்க சூரியன் ஆட்சியில் ‘மலைக்கோட்டை ஐயா’ மூலமாக தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. ஆனால், இந்த நிறுவனத்தின் சேவை அவ்வளவு திருப்தியாக இல்லை என அப்போதே புகார்கள் வெடித்தன. இதனால் டெண்டரை இடையிலேயே ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் மெனக்கெட்டது. ஆனால், அன்றாடப் பணியாக இருக்கும் தூய்மைப் பணியில் உடனடியாக சேவையை மாற்றினால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்ட அதிகாரிகள், மீண்டும் இந்த நிறுவனத்துக்கு டெண்டரை புதுப்பிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.
இந்த நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களும் தூய்மைப் பணியை குறை சொல்லி தனியார் நிறுவனத்துக்கு எதிராக கொடிபிடித்தனர். அந்தக் குரல்கள் அதுவாகவே அடங்கிப் போன நிலையில், நவம்பருடன் அந்த நிறுவனத்துக்கான ஒப்பந்த காலம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, அடுத்த 18 மாதங்களுக்கு தூங்கா நகரின் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள புதிதாக டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மாநகராட்சி. இந்த டெண்டரில் தற்போது ‘சேவையில்’ இருக்கும் நிறுவனம் மீண்டும் துடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக சில கிடுக்குப்பிடி நிபந்தனைகளை இடைச் செருகலாகச் சேர்த்திருக்கிறார்களாம் அதிகாரிகள்.
ஆனால், அதையெல்லாம் சமாளித்து டெண்டரை தங்களுக்கே சாதகமாக்க இப்போதுள்ள நிறுவனம் சென்னை மற்றும் உள்ளூர் ஆளும் கட்சி தலைகளை உரிய விதத்தில் ‘அப்ரோச்’ செய்து வருகிறதாம். அந்த தெம்பில் அந்த நிறுவனத்தின் கள அதிகாரிகள், “நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றோம் சார். அவ்வளவு ஈஸியா டெண்டரை இன்னொரு கம்பெனிக்கு போகவிட்டுட மாட்டோம்” என்று மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தவணை முறையில் கிலி உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.