பொழுதுபோக்காய் இன்ஸ்டாவில் இருந்தவர்களும் பிழைப்புக்காக இன்ஸ்டாவில் கொழித்தவர்களும் பல பேர் விசில் பார்ட்டியில் இப்போது எம்எல்ஏ, அமைச்சர் என இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் தாங்கள் படித்ததை எல்லாம் அவர்கள் அரசியலிலும் ஆங்காங்கே அழகாய் பயன்படுத்தி வருகிறார்கள்.
மஞ்சள் மாவட்டத்தில் ஆற்றின் பெயர் கொண்ட தொகுதியின் தமிழான எம்எல்ஏ ஒருவரும் ஒரு காலத்தில் இன்ஸ்டாவில் கலக்கிக் கொண்டிருந்தவர்தானாம். எம்எல்ஏ ஆன பிறகு அந்த ஆர்ப்பாட்டங்களை அம்மணி கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது பழைய ஆர்வம் எட்டிப் பார்க்கிறதாம்.
அண்மையில், தீபாவளிக்காக இன்ஸ்டாவில் வீடியோ போட்டவர், பக்கத்து ஊரான ‘மங்கலத்தில்’ உள்ள தனக்கு வேண்டப்பட்டவர்களின் ஜவுளிக்கடைக்குப் போய் துணி எடுத்த கதையைச் சொல்லி, மற்றவர்களையும் அந்தக் கடையில் துணி எடுக்கச் சொல்லி சிபாரிசு செய்திருந்தாராம். இதை இன்ஸ்டாவில் இன்ஸ்டால்மென்டில் பார்த்துவிட்டு, ‘இதுக்காகவா இவங்கள எம்எல்ஏ ஆக்கினோம்’ என்று தொகுதிவாசிகள் விவாதமேடை நடத்தியிருக்கிறார்கள்.
எம்எல்ஏ-வின் ஜவுளிக்கடை புரமோஷனைத் தாங்கிக் கொள்ளமுடியாத அந்தத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான சுந்தரமான ‘தோழர்’, “தொகுதி மக்களுக்காக செய்த காரியங்களை, செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி இன்ஸ்டாவில் பேசினால்கூட தப்பில்லை. அதைவிடுத்து, தனியார் ஜவுளிக்கடைக்கு, மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் இப்படி விளம்பரம் செய்வது சட்டப்படியே சரியில்லைங்க” என்று தன் பங்குக்கு விமர்சனக் கணைகளை வீசிவருகிறாராம்.