ஜனவரி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என மற்ற கட்சிகளுக்கு அவகாசம் அளித்து அறிக்கை தெளித்து வரும் கட்சியை இரண்டு முக்கியக் கூட்டணியுமே, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்ற ரேஞ்சில் ஒதுக்கி வைத்திருக்கிறார்களாம். அதற்கும் காரணம், கட்சித் தலைமை ‘பெரிதாக’ வைக்கும் டிமாண்டாம்.
அதைக் கேட்டு “இவர்களுக்கு இன்னும் என்ன செல்வாக்கு இருக்கிறது என்று இப்படியெல்லாம் பேசுகிறார்கள்?” என்று இரண்டு பெரிய கட்சிகளுமே கமென்ட் அடிக்கின்றனவாம்.
இவர்களின் ‘அட்டகாசமான’ அணுகுமுறையைப் பார்த்துவிட்டு, பனையூர் பக்கம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறதாம் பார்ட்டி. கூட்டணி இறுதியாகும் முன்னதாகவே தங்கள் கட்சியின் ‘இளவரசு’க்கு ‘அவார்டு’ நகர் தொகுதியை ரிசர்வ் பண்ணி வைத்துவிட்டார்களாம்.
பனையூர் பார்ட்டியின் தயவிருந்தால் அங்கே ‘இளவரசு’ ’முரசு’ கொட்டுவதில் முரண்பாடு இருக்காது என்பதால் ‘அவார்டு’ நகர் பனையூர் கட்சி தம்பிகளிடம் இணக்கமாக இருக்கும்படி சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்களாம்.
இப்படியொரு ஏற்பாடு இருப்பதால் அண்மையில் ‘அவார்டு’ நகரில் இரண்டு கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைக் கூட போலீஸ் வரைக்கும் போகவிடாமல் சுமுகமாகப் பேசிமுடித்துக் கொண்டார்களாம்.