பட்டாசு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கும் இந்தக் கடைகளுக்கான உரிமத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்குவார்.
இந்த மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் நிரந்தர பட்டாசுக் கடைகளும் இயங்கி வருகின்றன. இதுதவிர இந்த ஆண்டு சுமார் 4,300 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கிறதாம். அந்தக் கடைகளுக்கு மளமளவென அனுமதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிக கடைகளாக இருந்தாலும் இவற்றுக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனாலும், “விதிகளைப் பற்றி கவலைப்படாதீங்க. நாங்க உங்களுக்கு லைசென்ஸ் வாங்கித் தருகிறோம்” என்று சொல்லி பலரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் இதற்காகவே பல பேர் பையும், கையுமாகச் சுற்றுகிறார்கள். இதில் விசில் மக்களும் ஆங்காங்கே மூக்கை நுழைத்து அதிகாரத் தோரணை காட்டுகிறார்களாம்.
யாரெல்லாம் தற்காலிக லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருக்கிறார்களோ, அவர்களது தொடர்பு எண்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து தந்திரமாகச் சுட்டு, அவர்களுக்கு வசூல் பார்ட்டிகளே போன் போட்டு பேசுகிறார்களாம். விண்ணப்பத்தை ஓகே செய்து லைசென்ஸ் வாங்கிக் கொடுக்க யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு வசூலிக்கும் இந்தப் பார்ட்டிகள், கேட்டதைக் கொடுத்துவிட்டால் தேடி வந்து லைசென்ஸை தந்துவிட்டுப் போகிறார்களாம்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.