சூரியக் கட்சியைச் சேர்ந்த பட்டாசு மாநகரின் வணக்கத்துக்குரிய ‘மியூசிக்’ அம்மணிக்கு சொந்தக் கட்சி கவுன்சிலர்களே ஆசனத்துக்கு கீழே அணுகுண்டு வைக்கிறார்களாம். காரணம், சம்திங் விவகாரம் தான். மொத்தம் உள்ள கவுன்சிலர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் சூரியக் கட்சி தான். ‘மியூசிக்’ அம்மணி எதிலாவது ‘வெட்டுத் தட்டு’ பார்த்துவிட்டதாக தகவல் கசிந்தால் அடுத்த கூட்டத்தில் சூரியக் கவுன்சிலர்கள் ருத்ரதாண்டவம் ஆடிவிடுகிறார்களாம்.
அண்மையில் தூய்மை இந்தியா திட்டம் சம்பந்தப்பட்ட பணிக்காக 8 நபர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கான தீர்மானத்தை கூட்ட அஜெண்டாவில் சேர்த்திருக்கிறார் ’மியூசிக்’ அம்மணி. அந்த நியமனத்துக்காக தலைக்கு 5 லகரங்கள் பேசப்படுவதாக தகவல் கசிந்ததை அடுத்து கூட்டத்தில் ரகளையைக் கிளப்பிய கவுன்சிலர்கள், “எவ்வளவு வாங்குனீங்க?” என்று ஓபன் மீட்டிங்கிலேயே கூச்ச நாச்சம் பார்க்காமல் கேட்டார்களாம். இதனால் அன்றைய கூட்டத்தில் அந்த தீர்மானம் பாஸாகாமல் போனது.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி இதற்காகவே அவசரக் கூட்டத்தைக் கூட்டிய ’மியூசிக்’ அம்மணி, “முதலில் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். அப்புறம் குறைகள் பற்றி பேசலாம்” என்று ஆரம்பித்திருக்கிறார். ஆனால், அதற்கு சம்மதிக்காத கவுன்சிலர்கள், தீர்மானங்களை படிக்கவிடாமல் தர்ணாவில் ஈடுபட, கூட்டத்திலிருந்து வேகமாக எழுந்து போயிருக்கிறார் ‘மியூசிக்’.
அதன்பிறகு மைக் பிடித்த துணை ‘வணக்கத்துக்குரியவர்’ “எல்லா தீர்மானமும் நிறைவேறிடுச்சுன்னு அந்தம்மா சொல்லிட்டுப் போய்ட்டாங்க” என்று சொல்ல, உடனே எதிர்ப்புக் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் ரோட்டுக்கு வந்து மறியலில் குதித்தார்கள். கடைசியில், டிஎஸ்பி வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிட வைத்தார்.
அடுத்த கூட்டத்தில் இன்னும் ரகளையா இருக்குமோ என்று கேட்டால், “அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. அதுக்குள்ள எல்லாத்தையும் ‘முறையா’ செட்டில் பண்ணிருவாங்க. அடுத்த கூட்டம் ஸ்மூத்தா நடக்கும் பாருங்க. இப்படித்தான் போன தீபாவளிக்கு, குப்பை அள்ளும் காண்ட்ராக்ட் சம்பந்தமா பிரச்சினையைக் கிளப்புனாங்க.
உடனே, சம்பந்தப்பட்ட கம்பெனிக்கிட்ட பேசி எல்லாருக்கும் ‘செட்டில்’ பண்ணச் சொன்னாங்க. அடுத்த கூட்டத்துல அந்தப் பிரச்சினையைப் பத்தி யாரும் மூச்சே விடல. அது மாதிரி இப்பவும் தீபாவளி நேரமா இருக்கறதால எல்லாம் ‘அமுக்கபுளா’ முடிஞ்சிரும் பாருங்க” என்று சிரிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள்.