விழுப்புரத்துக்கு பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த, முக்கண் முதல்வரின் பெயரை தனது பெயருக்கு பின்னொட்டாகச் சேர்த்து வைத்திருக்கும் அதிகாரக் கட்சி எம்எல்ஏ-வானவர் பெரும்பாலான நேரங்களில் ‘உற்சாக’ மோடிலேயே இருக்கிறாராம். அதிலும் அந்தி மயங்கிவிட்டால் அண்ணலும் கட்டாயம் ’மயங்கி’ விடுகிறாராம்.
பெரும்பாலான நேரங்களில் எம்எல்ஏ அலுவலகத்திலேயே ‘கடையை’ ஓபன் செய்து கலகலப்பாகி விடுகிறாராம். சில நேரங்களில் ‘ஆட்டம்’ அதிகமானால் முன்னெச்சரிக்கையாக எம்எல்ஏ அலுவலகத்திலேயே ’செட்டில்’ ஆகிவிடுகிறாராம். அண்மையில் அப்படி ‘செட்டிலாகி’ இருந்தபோது மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு ‘கொக்குச் சிக்கலான’ குண்டக்க மண்டக்க மெசேஜ் ஒன்றை ‘தன்னிலை மறந்த நிலையில்’ தட்டிவிட்டுவிட்டாராம்.
அதைப் பார்த்துவிட்டு ஜிவ்வாகிப் போன ஆட்சியர், மெசேஜை காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி, “இதை கொஞ்சம் என்னான்னு விசாரிங்க” என்று சொன்னாராம். இதையடுத்து, மறுநாள் எம்எல்ஏ-வை வரவைத்துக் ‘காச்சிய’ கண்காணிப்பாளர், எக்கச் சக்கமாக எச்சரித்து அனுப்பினாராம். இந்த நிலையில், அந்த மாவட்டத் தலைநகரில் வெற்றிப் பயணம் திட்டம் தொடக்க விழாவில் எம்எல்ஏ வரவுக்காக அனைவரும் காத்திருந்தனராம்.
ஆனால், ஆட்சியரை ’நோக்க’ வேண்டி இருக்குமே என யோசித்தோ என்னவோ, குறித்த நேரத்துக்கு வராமல் கொஞ்சம் தாமதமாகவே வந்தாராம் எம்எல்ஏ. அதுவும் நல்லதாப் போச்சு என்று முடிவுக்கு வந்த ஆட்சியர், தானே கொடியசைத்து பேருந்தை துவக்கி வைத்துவிட்டு நகர்ந்தாராம். அதன் பிறகு அங்கு வந்த எம்எல்ஏ, தன் பங்குக்கு தனியாக கொடி அசைத்தாராம்.