ஒரே உறைக்குள் இரண்டு கத்திகளைச் செருகிய கண்டிஷனில் இருக்கிறது ‘அறிஞர்’ பிறந்த மாவட்டத்தின் ஆளுங்கட்சி அரசியல் நிலவரம். கதர் கட்சியிலும், திராவிடக் கட்சியிலும் காலம் தள்ளிவிட்டு கடைசியாக பலாப்பழ ஊர் சாணக்கியரின் கட்சியில் இருந்த ‘ரஞ்சிதமானவர்’ தேர்தல் சமயத்தில் விசில் கட்சிக்கு மாறினார். தேர்தலுக்குப் பிறகு அவரை மாண்புமிகு வட்டத்துக்குள்ளும் சேர்த்துக் கொண்டது விசில் கிங்டம். அதேசமயம், விசில் தலைவரின் மக்கள் இயக்கத்தில் கடமையாற்றி களைத்திருந்த ‘அரசுப்’ புள்ளிக்கு பெரிய ‘புதூர்’ தொகுதியைக் கொடுத்து ஜெயிக்க வைத்த பனையூர் பார்ட்டி, அவருக்கும் ‘மாண்புமிகு’ மகுடம் சூட்டியது.
இங்குதான் பிரச்சினையே. ஒரே மாவட்டத்தில் இரண்டு பேரை எஸ்கார்ட் சகிதம் வலம் வரவைத்ததால் மாவட்டத்தில் யார் பெரியவர் என்ற மல்யுத்தம் தொடங்கியது. இருந்தாலும், ‘அரசரை’ அறிஞர் மாவட்டத்துக்கு பொறுப்பு மாண்புமிகுவாகப் போட்ட தலைமை, இடையில் வந்து சேர்ந்த ஜூனியரான ரஞ்சிதத்தை ‘டர்னிங்’ ஊர் மாவட்டத்துக்கு பொறுப்பாகத் திருப்பிவிட்டது.
இருந்தாலும், சொந்த மாவட்டத்தைவிட்டுப் போக விரும்பாத ரஞ்சிதமானவர், அறிஞர் மாவட்டத்திலேயே தனது செல்வாக்கை நிலைநிறுத்த துடிக்கிறாராம். இதனால், ‘அரசர்’ கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அண்மையில், 100 நாள் வேலையை 120 நாட்களாக மாற்றும் திட்டத்தை ‘உத்திர’ தொகுதியில் தொடங்கி வைத்தாராம் ரஞ்சிதமானவர். தனக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தை விட்டுவிட்டு இவர் எப்படி சம்பந்தமில்லாத தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் தாம் தூம் போட்டாராம் ‘அரசர்’.
அதேபோல, அண்மையில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட போதும் தனக்கான பொறுப்பு மாவட்டத்துக்குப் போகாமல் சொந்த மாவட்டத்திலேயே ரஞ்சிதமானவருடன் சேர்ந்து நின்று ரீல்ஸுக்குப் போஸ் கொடுத்தாராம். இப்படி இரண்டு பேரும் கலந்துகட்டி அடிப்பதால் யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்களாம்.