தமிழகம்

சீற்றக் கட்சி தலைகளின் கவலை | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

அனைத்துக் கட்சிகளிலும் இருப்பதைப் போலவே சீற்றக் கட்சியிலும் சூரியக் கட்சி எதிர்ப்பு - ஆதரவு என இரண்டு கோஷ்டிகள், ‘அறிவாளிகளின் மவுனம் ஆபத்தானது’ என்று அட்வைஸ் செய்யுமளவுக்கு சலங்கை கட்டி ஆடுகிறதாம்.

சூரியக் கட்சியின் ‘ஒலி’ கட்டிடம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று சொல்லி முதன்மையானவரின் குட் புக்கில் இடம்பிடித்த ‘கிங்’ பிரமுகர் இப்போது மாண்புமிகுவாகவும் இருக்கிறார்.

தனக்கான இடம் தானாகவே கனிந்துவிட்டதால் கட்சியின் பிற சீனியர்களை அவ்வளவாய் மதிப்பதில்லையாம் திருவாளர் ‘கிங்’. இந்த நிலையில், தான் வெற்றி பெற்ற ‘புரம்’ மாவட்டத்தில் தங்கள் கட்சிக்கென ஒரு எம்பி இருப்பதையே ‘கிங்’ வசதியாக மறந்தே விட்டாராம்.

மாவட்டத்துக்கு பொறுப்பான ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவுக்கு ஆட்சியையும் கட்சியையும் கொண்டு செலுத்தும் ‘தலையாய’ பணிகள் இருப்பதால் அவர் ‘புரத்துப்’ பக்கம் அவ்வளவாய் வருவதில்லை. இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ‘புரத்துக்குள்’ ஆய்வுக் கூட்டம், அரசு நிகழ்ச்சிகள் என கலந்து கட்டுகிறார் மாண்புமிகு ‘கிங்’.

அவ்வப்போது, சூரியக் கட்சிக்கு சூடுவைக்கும் வசனங்களை இவர் சூளுரைப்பதால், விசில் கட்சி இவருக்கு சொந்தக் கட்சி மாண்புமிகு கணக்காய் சுதந்திரம் கொடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில், ‘மோதிரம்’ திட்டத்தை தனது தொகுதியின் தலைநகரத்தில் ‘கிங்’ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தங்களது கட்சி எம்பி-யைக் கூட அவர் அழைக்க நினைக்கவில்லையாம்.

இதனால் ‘புரம்’ தொகுதியில் பழக் கட்சி எம்எல்ஏ-வுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு தாய்மாமன் மோதிரம் போட்டார் எம்பி. அதே தினத்தில் எம்பி தலைமையில் மாவட்டத் தலைநகரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கூட்டத்திலும் தலைக்காட்டாமல் தவிர்த்துவிட்டார் ‘கிங்’. இது எங்கு போய் நிற்குமோ என்பதுதான் ‘விவகாரம்’ தெரிந்த சீற்றக் கட்சி தலைகளின் இப்போதைய கவலையாக இருக்கிறது.

SCROLL FOR NEXT