பூட்டு மாவட்டத்தின் ‘சத்திரம்’ தொகுதியை மீண்டும் தக்கவைத்த சூரியக் கட்சியின் ‘சுகர்’ வேட்பாளரை எதிர்த்து விசில் ஊதியவர் மோகனமான வேட்பாளர். அவர் பேசியதாக வெளியாகி இருக்கும் மிரட்டல் ஆடியோ ஒன்று அம்மாவட்ட ஆளும் கட்சியினரை அலறவைத்துக் கொண்டிருக்கிறது.
சுமார் 5 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவில், நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் சம்பந்தப்பட்ட 40 கசமுசா வீடியோக்கள் தன்வசம் இருப்பதாக தடதடக்கிறார் மோகனப் புள்ளி. யார் யாரெல்லாம் வீடியோவில் களியாட்டம் போட்டிருக்கிறார்கள் என பெயர்களையும் பட்டியல் போட்டிருக்கிறார். இதுதவிர, ‘சத்திரம்’ தொகுதி சம்பந்தப்பட்ட ஃபைல்ஸ் தனியாக இருப்பதாகவும் ட்ரைலர் ஓட்டுகிறார்.
“சூரியக் கட்சியின் ‘சுகர்’ வேட்பாளரை எதிர்த்து நிற்பது தற்கொலைக்குச் சமம் என்று தெரிந்தும் நான் நின்றேன். ஆனால், வெற்றி பெற்றிருக்க வேண்டிய என்னை, சூரியக் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு யார் தோற்கடித்தது என்று தெரியும். அவர்களைப் பற்றிய வீடியோ என்னிடம் உள்ளது, ‘தெரியாமல் நடந்துவிட்டது’ என்று என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவேன்.
இல்லாவிட்டால், தினம் ஒரு வீடியோவாக இங்கேயும் தலைமைக்குமாக ரிலீஸாகிக் கொண்டே இருக்கும். கட்சியின் பெயர் கெட்டுப் போவதை என்னால் அனுமதிக்க முடியாது” என்று மோகனப் புள்ளி பேசி இருக்கும் செல்போன் உரையாடல் இப்போது மாவட்டம் முழுக்க வைரலாகி வருகிறது.