கோழிப்பண்ணை மாவட்ட சூரியக் கட்சி தற்போது மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், தலைநகரை உள்ளடக்கிய மத்திய மாவட்டத்துக்கு எப்படியாவது செயலாளராகிவிட வேண்டும் என சிட்டிங் மாவட்டச் செயலாளரும் சின்னவரால் முன்னுக்கு கொண்டுவரப்பட்டவருமான ‘ராஜகுமாரர்’ பிளான் போடுகிறாராம்.
ஆனால், சட்டமன்றத் தேர்தலில் இவரது பிர்காவுக்குள் இருந்த மூன்று தொகுதிகளிலும் சூரியன் மூன்றாமிடத்தைப் பிடித்ததுதான் இவர் செய்த ‘சாதனை’ என்று சொல்லி தலைமைக்கு புகார்களைத் தட்டிவிட்டிருக்கும் மாவட்ட நிர்வாகிகள் சிலர், “எக்காரணம் கொண்டும் இவரை மீண்டும் மாவட்டப் பொறுப்பில் அமர்த்தி விடாதீர்கள். புதியவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அந்தப் பதவியைக் கொடுங்கள்” என்று பதறி இருக்கிறார்களாம்.
இருந்தாலும் பெருத்த நம்பிக்கையுடன் இருக்கும் ‘ராஜகுமாரர்’, கட்சிக்காரர்களை சந்திப்பதையே தவிர்த்து வந்த தனது பழைய பாலிசியை மாற்றிக் கொண்டு, இப்போது யார் தன்னை சந்திக்க வந்தாலும் மணிக்கணக்கில் உட்காரவைத்து மாண்புடன் கதைக்கிறாராம்.
12-ம் தேதி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட செயற்குழு கூட்டத்தை அண்மையில் கூட்டி இருக்கிறார். திரளான கூட்டத்தைக் கூட்டினால் யாராவது திகிலாகப் பேசி துயரத்தைக் கூட்டிவிடக் கூடும் என்று பயந்தவர், கமுக்கமாக அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்தாராம்.
அதனாலேயே பார்ட்டி ஆபீஸை தவிர்த்துவிட்டு வேறொரு இடத்தில் அந்தக் கூட்டத்தை நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.