கட்சி விவகாரத்தை கடைவிரித்து சொன்ன மஞ்சள் மாவட்டத்தின் பாலாஜி பெயர் கொண்ட ‘தோப்பு’ பார்ட்டியை கட்சிப் பொறுப்பில் இருந்து கழற்றிவிட்டிருக்கிறது அறிவாலயம். பெரிய துறை தொகுதியில் தோற்றது முதலே மிகுந்த மன வருத்தத்தில் இருந்தாராம் ‘தோப்பார்’. இதைப் புரிந்து கொண்டு இலைக் கட்சி தரப்பில் இருந்து பேசியவர்கள், “மீண்டும் நீங்க நம்ம பக்கம் வந்துருங்க.
சூரியக் கட்சியில சோபிக்காட்டா என்ன... இடைத் தேர்தல்ல உங்களுக்கே பெரிய துறை சீட்டை கன்பாஃர்ம் பண்ணிக்கலாம்” என்று வலை வீசினார்களாம். அதேபோல் விசில் கட்சியின் ’கோட்டையன்’ தலைவரும் தனது செல்வாக்கை தக்கவைக்க ‘தோப்புக்கு’ சோப்புப் போட்டுப் பார்த்தாராம்.
ஆனால், ஏற்கெனவே சூரியக் கட்சி சீனியரான ‘முத்தான’ சாமியை மீறி எதுவும் சாதிக்க முடியாமல் இருக்கும் திருவாளர் ‘தோப்ஸ்’, விசில் கட்சியிலும் சீனியர் ‘கோட்டையன்’ தலைவரை மீறி சிரிக்கக் கூட முடியாதே என்று தயங்கினாராம். அதனால் விசில் பார்ட்டி விசிட்டை சாய்ஸில் வைத்துவிட்டாராம்.
அநேகமாக அவர் இலைக் கட்சியில் சேர்ந்து இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்கிறார்கள். இந்த மூவ்கள் எல்லாம் தெரிந்ததால் தான் ‘தோப்பாரை’ மாவட்டப் பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டதாம் சூரியக் கட்சி. இதையடுத்து, உட்கட்சி விவகாரத்தை ஊடகத்தாரிடம் பேசிய ‘தோப்பார்’, “எதற்காக என்னைக் கட்சிப் பொறுப்பை விட்டு எடுத்தார்கள் என்று இன்னும் ஒரு வாரத்திற்குள் தலைமை எனக்குச் சொல்லணும்.
அப்படிச் சொல்லவில்லை என்றால் என்னுடைய பதிலை நான் சொல்வேன்” என்று சொல்லி இருக்கிறார். அநேகமாக அதுவரைக்கெல்லாம் அவரை காத்திருக்க வைக்காமல் சூரியக் கட்சி தலைமை எந்த நேரத்திலும் அவரை கட்சியிலிருந்தும் கட்டம்கட்டிவிடும் என்கிறார்கள்.