நள்ளிரவில் காதும் காதும் வைத்தாற்போல கட்சியை கலைத்துவிட்டு மலர் கட்சியில் சேர்ந்த சுப்ரீம் ஹீரோவை அந்த கட்சி ஒதுக்கியே வைத்திருக்கிறதாம்.
கட்சியில் கலந்த சமயத்தில், “அண்ணாச்சியின் தேவை டெல்லிக்குத் தேவை” என அப்போது மலர் கட்சிக்கு தலைவராக இருந்த மவுன்ட் தலைவர்கூட மகிழ்ந்துபோய் சொன்னார். ஆனால், அவரையே புறந்தள்ளிய மலர் கட்சி தலைமை, ஸ்டாரையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர் பரிசீலனையிலும் அவரை ஒதுக்கியவர்கள், பிரச்சாரத்துக்கும் அவரை பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் டெல்லி பார்ட்டிகள் மீது மன வருத்தத்தில் இருக்கிறாராம் ஹீரோ.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை ‘அல்வா சீமைப்’ பக்கம் அமர்க்களமாக கொண்டாடி இருக்கிறார் ஹீரோ. இந்த விழா மேடையில் மலர் கட்சி தலைவரையும் அழைத்து உட்காரவைத்து தனது உறவின்முறையினர் மத்தியில் இன்னமும் தனக்கிருக்கும் மங்காத செல்வாக்கை படம்பிடித்துக் காட்டினாராம்.
அவரும் “நம்ம ஹீரோவுக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது” என்று வானளாவப் புகழ்ந்து பேசிவிட்டுப் போயிருக்கிறார். மலர் கட்சி தலைவரின் பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி இருக்கிறது. இருப்பினும் கட்சி சீரமைப்பு நடவடிக்கையாக மாநிலத் தலைவர் மாற்றமும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
அந்த பதவி மீது ஹீரோவுக்கும் தொடக்கம் முதலே ஒரு கண் இருப்பதாகச் சொல்பவர்கள், “திடீரென அண்ணன் இப்படி சொந்த ஊர் பக்கம் படை திரட்டிக் காட்டி இருப்பது, இருக்கும் கட்சியில் தனக்கான இடத்தைப் பிடிக்கவா அல்லது கலைத்த கட்சியை மீண்டும் கட்டமைக்கவா?’’ என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்.