தெற்கே உள்ள ‘சமுத்திரம்’ தொகுதியில் இலைக் கட்சி சார்பில் வாகை சூடிய முன்னாள் மாண்புமிகு ‘அய்யா’வானவர் தனது தொழில் துறை துருப்பிடிக்காமல் இருப்பதற்காக அண்மையில் பனையூர் கட்சியில் ‘பங்குதாரர்’ ஆனார்.
இவரோடு சேர்ந்து இவரது சாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அண்ணனின் அடி தொட்டு தங்களின் ‘நிகழ்கால’ நலன் கருதி விசிலைக் கையில் எடுத்தார்கள். ஆனால், அந்தத் தொகுதியில் விசில் கட்சியில் ஏற்கெனவே பொறுப்பில் இருக்கும் ‘அண்ணாச்சிகள்’ இவர்களின் மீசையைப் பார்த்து மிரள்கிறார்களாம்.
இந்த அழையா விருந்தாளிகளின் வருகையை அவ்வளவாய் ரசிக்காத ‘அண்ணாச்சிகள்’, கட்சி நிகழ்ச்சிகளில் இவர்களை கண்டு கொள்வதே இல்லையாம். ஆனால், ஏற்கெனவே உதார்விட்டே அரசியல் நடத்திப் பழகிவிட்ட ‘அய்யா’வின் விசுவாசிகள் இதை ஏற்க முடியாமல், “என்னலே... கட்சி நிகழ்ச்சின்னா எங்கள எல்லாம் கூப்பிடமாட்டியளோ” என்று வந்த இடத்திலும் ‘வார்’ தொடுக்கிறார்களாம்.
இதனால் டரியலாகிப் போன விசில் கட்சி ‘அண்ணாச்சிகள்’ தங்கள் கட்சியின் ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவைச் சந்தித்து, “அண்ணாச்சி... இந்தாளுங்க பண்ற லொம்பளம் தாங்கமுடியல அண்ணாச்சி. இதுக்கு ஒரு வழியச் சொல்லுங்க” என்று மூக்கால் அழுதார்களாம்.
இதையடுத்து, அழையா விருந்தாளிகளை அழைத்துப் பேசிய ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு, “த பாருங்கப்பா... என்ன இருந்தாலும் அவங்க தான் உங்களுக்கு சீனியர். அதனால அவங்கள எந்தத் தொந்தரவும் செய்யாதீங்க” என்று தனது பாஷையில் அறிவுறுத்தினாராம்.
இதையடுத்து, ‘அய்யா’ வட்டாரம் கடந்த சில தினங்களாக அடக்கிவாசிக்கிறதாம். இதனிடையே, மீண்டும் இந்தத் தொகுதியில் மிஸ்டர் ‘அய்யா’வே களமிறங்கினால் அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப இலைக் கட்சி தரப்பில் சத்தமில்லாமல் வேலையைத் தொடங்கி விட்டார்களாம்.
இந்தத் தொகுதியில் ‘அய்யாவழி’ சமயத்தை பின்பற்றும் ‘அண்ணாச்சிகள்’ கணிசமாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒருமுகப்படுத்தினாலே வெற்றிக்கு சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கான வேலையைத்தான் இலைக் கட்சி தரப்பில் இப்போது தொடங்கி இருக்கிறார்கள்.