தமிழகம்

வியூக வலையில் தப்பினாரா முன்னாள் இனிஷியல் மாண்புமிகு? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘வெளிநாட்டு ‘சிகிச்சைக்கு’ போயிருந்த சூரியக் கட்சியின் முன்னாள் இனிஷியல் மாண்புமிகுவை விசாரணைக்கு அழைப்பதுபோல அழைத்து உள்ளே தூக்கி வைக்க வியூக வலை விரித்ததாம் ஆளும் கட்சி மேலிடம்.

இதற்குக் காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில் சொந்தக் கட்சிக்கும், அப்போது பந்தத்தில் இருந்த கட்சிகளுக்கும் செலவுக் கணக்கை கத்தை கத்தையாக கவனித்துக் கொண்டவர் இவர்தானாம்.

தங்களுக்கு எப்படி எல்லாம் ‘பட்டுவாடா’ செய்யப்பட்டது என்பதை விசில் கட்சி பக்கம் தாவி இருக்கும் சூரியக் கட்சியின் முன்னாள் பங்காளிகள் சிலரே சூசகமாக போட்டுக் கொடுத்தார்களாம். அந்த தகவல்களை வைத்துக் கொண்டு, இனிஷியல் பார்ட்டியை அமலாக்க வலைக்குள்ளும் அள்ளிப் போட்டு மடக்க ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததாம் ஆட்சி மேலிடம்.

ஆனால், இந்த தகவல்களை எல்லாம் முன்கூட்டியே இனிஷியல் வட்டாரத்துக்கு லீக் செய்துவிட்டார்களாம் ‘ஒழிப்பு’ துறையில் இருக்கும் உளவாளிகள். இதையடுத்து, தலை சிக்காமல் இருப்பதற்கான தற்காப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவைத்துவிட்டாராம் மிஸ்டர் இனிஷியல்.

இருந்தாலும் “அவரை எப்படியும் தூக்கிவிடலாம்” என்று ஆட்சி மேலிடத்துக்கு உத்தரவாதம் கொடுத்துக் கொண்டே இருந்தார்களாம். ஆனாலும், சட்டப் பாதுகாப்புடன் இனிஷியல் விஐபி ஹாயாக சென்னை வந்து இறங்கிவிட்டார். இந்த தோல்வியை அடுத்தே, ‘ஒழிப்புத்’ துறையின் முக்கிய அதிகாரியை உடனடியாக அங்கிருந்து தூக்கி அடித்தார்களாம்.

இத்தனைக்கும் இவரை இந்த இடத்தில் அமர்த்தியதில் ஆட்சி மேலிடத்துக்கு வேண்டிய ‘பண்டிதரின்’ பலமான சிபாரிசும் இருந்ததாம். இப்போது இவரை தூக்கச் சொன்னதும் அவரே என்கிறார்கள். இனிஷியல் பார்ட்டி விவகாரத்தில் அடுத்த அட்டெம்ட் எக்காரணம் கொண்டும் மிஸ்ஸாகவே கூடாது என ‘ஒழிப்புத்’ துறைக்கு வார்னிங் கொடுத்திருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.

SCROLL FOR NEXT