‘தேர்தலுக்கு முன்னதாகத்தான் கதர் கட்சிக்கு புதிய மாவட்டத் தலைவர்களை நியமனம் செய்தார்கள். யாருடைய தலையீடும் இல்லாமல் தகுதி அடிப்படையில் இந்த நியமனங்கள் நடத்தப்பட்டிருப்பதாக டெல்லி தலைமை மார்தட்டிக் கொண்டது. ஆனால், பெருவாரியான இடங்களில் வழக்கம் போலவே காங்கிரஸ் ‘பண்ணையார்கள்’ தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்டத் தலைவர் பொறுப்புகளில் தந்திரமாக அமர்த்திவிட்டார்கள். இதில் முன்னாள் ‘வெல்த்’ தலைவரும் தன் பங்கிற்கு ஆங்காங்கே ஆட்களை திணித்துவிட்டாராம். இவர்கள் எல்லாம் தனக்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம் என இப்போது புதிதாக வந்திருக்கும் ‘ஜெம்’ தலைவர் சந்தேகிக்கிறாராம்.
அதேசமயம், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களை ஆறு மாத கால அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் மாற்றிவிடலாம் என்ற விதி இருக்கிறதாம். அந்த விதியின் கீழ், எங்கெல்லாம் கதர் கூட்டணி தோற்றுப் போனதோ அங்கெல்லாம் மாவட்டத் தலைவர்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்கும் யோசனையில் இருக்கிறாராம் மிஸ்டர் ‘ஜெம்’.
இருந்தாலும், “நீங்கள் யாருடைய அணியாக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நமக்கெல்லாம் ஒரே தலைவர் இளம் தலைவர் தான். அனைவரும் அவரது படத்தை பெரிதாகப் பயன்படுத்த வேண்டும்” என்று அண்மையில் கூட்டிய மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்திருக்கிறாராம்.