தமிழகம்

‘கார்த்திகை’ பார்ட்டிக்கு எதிரான களேபர ஆடியோ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

தென் மாவட்டத்தில் உள்ள ‘புத்தூர்’ தொகுதியில் கண்மாயில் சவுடு மண் அள்ளும் பஞ்சாயத்தில் சூரியக் கட்சியின் ‘கனியான’ பேரூராட்சி கவுன்சிலருக்கும் ‘கார்த்திகையான’ ஆளும் கட்சி எம்எல்ஏ-வுக்கும் இடையில் நடந்த மோதல் போலீஸில் கொலை மிரட்டல் புகாராகி ‘கனியானவர்’ கைது செய்யப்பட்டு பெயிலில் விடப்பட்டது தெரிந்த கதை.

“எம்எல்ஏ சொன்னவருக்கு மட்டும் தான் மண் அள்ள டோக்கன் கொடுப்பீர்களா... கண்மாய் கரையை பலப்படுத்த மண் எடுக்க உள்ளூர்க்காரரான எங்களுக்கு உரிமை இல்லையா?” என்பது தான் ‘கனியானவர்’ எழுப்பிய வாதம். அதற்கு, “பணம் வாங்கிக் கொண்டு நாங்கள் யாருக்கும் மண் அள்ள அனுமதி கொடுக்கவில்லை” என்று ‘கார்த்திகை’ எம்எல்ஏ கண்டிப்புடன் மறுத்திருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக ஆடியோ ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இலைக் கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் அடைக்கலம் புகுந்த திருமலைக் கடவுளின் பெயர் கொண்ட அந்த நபர் பேசியிருக்கும் அந்த ஆடியோவில், ‘புத்தூரில்’ மண் எடுக்க வேண்டுமானால் ரூ.30 ஆயிரமும் அமைச்சரின் ‘பாளையம்’ தொகுதியில் மண் எடுக்க ரூ.50 ஆயிரமும் கொடுத்தால் போதும். இது விஷயமாக என்னை எம்எல்ஏ பேசச் சொல்லி இருக்கிறார். சென்னையில் லிஸ்ட் ரெடியாகிட்டு இருக்கு. பணம் கொடுத்தால் உடனே மண் அள்ள டோக்கன் கிடைத்துவிடும் என்ற தொனியில் ஓடுகிறது பேரம். தேர்தலுக்கு முன்னதாக ‘கார்த்திகை’ எம்எல்ஏ-வை சுற்றி ஒரிஜினலான விசில் கட்சி தம்பிகள் மட்டுமே இருந்தார்களாம்.

ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இலைக் கட்சியில் இருந்து வந்தவர்களை வைத்து தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிவிட்டாராம் திருவாளர் ‘கார்த்திகை’. இதனால் ஒரிஜினல் பார்ட்டிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். அந்த ஆதங்கத்தில் தற்போது, ‘கார்த்திகை’ பார்ட்டிக்கு எதிராக களேபரத்தை உண்டாக்கும் இந்த ஆடியோவை ஒரிஜினல் விசில் கட்சியினரே, ‘பிடிச்சிருந்தா ஷேர் பண்ணு... லைக் பண்ணு’ என்று வேகமாக பரப்பி வருகிறார்களாம்.

SCROLL FOR NEXT