தமிழகம்

‘தங்கமானவர்’ வருகை மனுவை கிடப்பில் போட்ட பனையூர் பார்ட்டி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘மகனை வைத்து, தொட்டது அனைத்திலும் ‘தூர் வாரினார்’ என்று சொந்தக் கட்சியினரே தூற்றிக் கொட்டியதால் கடந்த ஆட்சியில் ‘மாண்புமிகு’ மகுடத்தை இழந்த ‘தங்கமான’ புள்ளி அவர். தென் கோடி மாவட்டத்தின் மைந்தரான இவர், மாவட்ட செயல்புள்ளியாகவும் இருக்கிறார். ‘மகுடத்தை’ பறித்த சமயத்திலேயே அடுத்த தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுத்துவிட்டது ‘தங்கப்’ புள்ளிக்கு. அதனால், அப்போதே பனையூர் கட்சியை நோக்கி பாயும் பிளானுக்குத் தயாரானார்.

ஆனால், இடையில் தலைமை என்ன நினைத்ததோ தெரியவில்லை. அவருக்கு புதிய இலாகாவை ஒதுக்கி மீண்டும் மாண்புமிகுவாக்கியது. ஆனாலும் ‘தங்கம்’ எதிர்பார்த்தது போலவே அவருக்கு இந்தத் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இலைக் கட்சி தலைவர்கள் சாரை சாரையாய் கிளம்பிப் போவதைப் பார்த்துவிட்டு ‘தங்கத்’ தலைவரும் விசில் கட்சிக்கு ‘குலுக்கல் மாப்பிள்ளை’ மூலமாக தூது அனுப்பினாராம்.

ஆனால், இவர் இப்படியொரு மூவில் இருக்கிறார் என்று தெரிந்ததுமே தலைமையைத் தொடர்பு கொண்ட மாவட்டத்தின் விசில் பார்ட்டி முக்கிய பொறுப்பாளர்கள், “இவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாது... இவரைக் கட்சிக்குள்ள கொண்டுவந்தீங்கன்னா, எங்களை எல்லாம் ஓரங்கட்டி இந்த மாவட்டத்துல கட்சியே இல்லாமப் பண்ணிருவாரு. இதையும் மீறி உங்களுக்கு அவரு ரொம்ப முக்கியம்னா எங்கள விட்டுருங்க” என்று கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்களாம். இருப்பினும் சூரியக் கட்சியிலிருந்தும் ஒரு ‘எக்ஸ்’ நம்மை நோக்கி வருவதை ஏன் தவிர்க்க வேண்டும் என யோசிக்கும் ஆளும் கட்சி தலைமை, ‘தங்கமானவரின்’ தன் வருகை மனுவை தற்காலிகமாக கிடப்பில் வைத்திருக்கிறதாம்.

SCROLL FOR NEXT