தூங்கா நகரின் பிரசித்தி பெற்ற ‘அம்மன்’ கோயில் அறங்காவலர் குழுவினரை உடனடியாக ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுக்கிறார்களாம். உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு கமிட்டியின் பரிந்துரைபேரில்தான் அந்தக் கோயிலுக்கு ஐந்து பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் ஒருவரான சூரியக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவின் அம்மா தான் கோயில் தக்காராக இருக்கிறார். இவர்களின் பதவிக் காலம் 2028 ஜனவரி வரை இருக்கிறதாம். இருந்தாலும் அதற்கு முன்னதாகவே அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு புதிதாக குழுவை அமைக்க அவசரம் காட்டுகிறதாம் ஆளும் கட்சி.
ராஜினாமா விவகாரத்தை எழுத்துபூர்வமாக வலியுறுத்தினால் அதை வைத்தே நீதிமன்றத்துக்குப் போய் தடை வாங்கிவிடுவார்கள் என்பதால் வாய்மொழியாக அழுத்தம் கொடுக்கிறார்களாம். அதுவும் நேரடியாக இல்லாமல், “என்ன செய்வீர்களோ தெரியாது... நீங்கள்தான் அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்க வேண்டும்” என்று அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம்.
ராஜினாமா கடிதம் வாங்கும் விவகாரத்தில் மெத்தனமாக இருந்ததாகச் சொல்லி அங்கிருந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட அதிகாரியை பக்கத்து மாவட்டத்தில் உள்ள தீவுக் கோயிலுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டுவிட்டார்களாம். இதையடுத்து, “வரும் திங்கள் கிழமைக்குள் நீங்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தால்தான் என்னை மறுபடியும் இங்கே பணி செய்யவிடுவார்கள்” என்று சொல்லி அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வருகிறாராம் அந்த அதிகாரி.
இதற்கு நடுவே, அறங்காவலர் குழுவில் இருக்கும் சில பெரிய இடத்து மனிதர்களை ஒருசிலர் மீசையை முறுக்கிவிட்டபடியே ‘அன்பாகப்’ பேசி ராஜினாமா விவகாரம் தொடர்பாக அடிக்கடி தொல்லை கொடுத்தும் வருகிறார்களாம். செப்டம்பர் மத்தியில் இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த தேதி குறிக்கப்பட்டிருப்பதால் அந்த சமயத்தில் சூரியக் கட்சியினர் அறங்காவலர்களாக இருந்து கொண்டு அதிகாரம் செய்யக் கூடாது என்ற கணக்குடன்தான் இத்தனை பிரஷரைப் போடுகிறார்களாம்.