தமிழகம்

‘குறுநில மன்னர்’ ஆன ‘தனிக்காட்டு ராஜா’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்டை’ மாவட்ட சூரியக் கட்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தவரை அண்மையில் அதிகார எல்லையை சுருக்கி குறுநில மன்னர் கணக்காய் ஆக்கியது தலைமை. அவர் வைத்திருந்த அதிகாரத்தில் பாதியை தலைமைக் கழகத்தின் ‘பொது’வான அந்த சீனியர் தனது புத்திர சிகாமணிக்கு தந்திரமாக வாங்கிக் கொடுத்துவிட்டார். இதனால், குறுநில மன்னராக்கப்பட்டவர் ’நொந்தகுமார்’ கணக்காக அப்செட் ஆகிப்போனார்.

செயலாக இருந்தவரை பொறுப்புப் பதவியில் போட்டால் யார் தான் அப்செட் ஆகமாட்டார்கள்? முன்பெல்லாம் அவரது வீட்டு வாசலில் காலையிலேயே நாற்பது ஐம்பது பேர் நிற்பார்களாம். இப்போது அதுவும் பாதியாகக் குறைந்துவிட்டதாம்.

இருந்த போதும், அவரது ஆதரவாளர்கள், ‘வெயிட் அண்ட் ஸீ... மறுபடியும் நாங்க தான்... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்றெல்லாம் வாட்ஸ் அப் குழுக்களில் வாள் வீசிக் கொண்டிருக்கிறார்களாம். பதிலுக்கு புத்திர சிகாமணி வட்டத்தில் இருப்பவர்கள், ‘வாலை ஒட்ட நறுக்கி பரண்ல போட்டாச்சுல்ல...’ என்று வாட்ஸ் அப்பிலேயே வம்பு வளர்க்கிறார்களாம்.

இதனிடையே, மாவட்டம் ஒன்றுபட்டு இருந்த போது, திருவாளர் ‘நொந்தகுமார்’ தரப்பால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களில் சிலர் பழைய பாசத்தில் எதிர் முகாமுக்கு ‘அப்டேட்’ கொடுப்பதாகச் சந்தேகப்படும் புத்திர சிகாமணி, அப்படியான ‘ஸ்பை’களை எல்லாம் களையெடுத்துவிட்டு அந்தப் பொறுப்புகளை தனது விசுவாசிகளுக்கு வழங்க ஆயத்தமாகிறாராம்.

SCROLL FOR NEXT