‘தென்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இன்னொரு முன்னாள் மாண்புமிகு இன்று அல்லது நாளை விசில் கட்சிக்கு வீடுமாறலாம் என்கிறார்கள். ‘அம்மா’ காலத்தில் ‘கானக’ துறைக்கு மாண்புமிகுவாக இருந்த அந்த ‘க்ரீன் மால்’ பிரமுகரை 2016-க்குப் பிறகு அரசியலில் தலையெடுக்க விடாமலே வைத்திருந்தது உள்ளூர் உள்ளடி அரசியல்.
அப்படியும் கொள்கை மாறாக் குன்றாக இருந்தவர் இந்தத் தேர்தலில், ‘...ச்சல்’ தொகுதி தனக்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். எடக்கானவரும், “தொகுதி உங்களுக்குத்தான்” என்று உத்தரவாதம் அளித்திருந்தாராம். இதை நம்பி கடந்த ஒரு வருட காலமாக தொகுதிக்குள் தேர்தலை எதிர்நோக்கி சில பல வேலைகளைச் செய்து வைத்திருந்தாராம் மிஸ்டர் ‘க்ரீன்’.
ஆனால், கடைசி நேரத்தில் தொகுதியை மலர்க் கட்சிக்கு மனமுவந்து கொடுத்துவிட்டதாம் இலைக்கட்சி தலைமை. இதனால் பெரும் வருத்தத்தில் உழன்று கொண்டிருந்த மிஸ்டர் ‘க்ரீன்’ தனது ஆதரவாளர்கள் 15 பேரைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி விட்டாராம்.
தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் ‘க்ரீன் மால்’ டீம் இன்று அல்லது நாளை ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு முன்னிலையில் விசில் கட்சியில் கலக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். முதல்கட்டமாக 15 பேரை திரட்டிக் கொண்டு வந்திருந்தாலும் அடுத்தகட்டமாக இன்னும் பலரை இட்டுக்கினு வருவதாக ‘மகிழ்ச்சி’ மாண்புமிகுவுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார்களாம்.