தமிழகம்

கதர் சீனியரின் ‘சந்திப்பு’ பின்னணி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

முதன்மையானவரை கோட்டையில் சந்தித்துப் பேசி அளவளாவிய கதர் சீனியர், அடுத்த கட்டமாக தோழர்களையும் சிறுத்தை தலைவரையும் தேடிப் போய் சந்தித்துப் பேசி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘அன்புத் தலைவர்’ எதற்காக இந்த மூவ் எடுக்கிறார் என்று அர்த்தம் தெரியாமல் கதர் தலைவரின் ஆதரவாளர்களே பெரும் குழப்பத்துக்கு ஆளானார்கள். அதேசமயம், பகலில் நடந்த இந்த சந்திப்புகள் எல்லாம் மீடியாக்களில் செய்தியாகின. அதேசமயம், 5-ம் தேதி இரவு சூரியக் கட்சி தலைவரையும் ‘மரியாதை நிமித்தம்’ சந்தித்துப் பேசினாராம் தலைவர்.

அத்துடன், பெரியார் கட்சி தலைவரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். ஆனால், இந்த விவகாரங்கள் வெளியில் வரவில்லை. கட்சிப் பத்திரிகையில் நமது இளம் தலைவரை தாறுமாறாக தாக்குமளவுக்கு ஆத்திரத்தைக் காட்டும் சூரியக் கட்சியுடன் இன்னும் உறவாடும் அளவுக்கு தலைவர் என்ன கணக்கு - வழக்கு வைத்திருக்கிறார் என்று தெரியலையே...” என்று மறுகித் தவிக்கிறதாம் அவரது ஆதரவு வட்டாரம். எதிர் முகாமோ, “சொல்லாம போய்ட்டீங்கன்னு சூரியக் கட்சிக்காரங்க தூத்துறாங்க தானே... அதுதான் சொல்லிட்டு வரலாம்னு போயிருப்பார்” என்று கிண்டலடிக்கிறது.

இதனிடையே, தந்தையார் இப்படி சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்க, தொகுதிப் பக்கம் அவருடைய வாரிசோ, “இந்தப் பையன் நம்மள விட ஜூனியர். இதுவரைக்கும் நம்மள வந்து பார்க்கல. அதனால, நம்மளும் யாரும் அவரப் பார்க்கப் போகவேண்டாம்” என்று உள்ளூர் அமைச்சரைச் சுட்டிக்காட்டி சொந்தக் கட்சியினருக்கு ’ரிவெஞ்ச்’ பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

SCROLL FOR NEXT