விசில் பார்ட்டி ‘எக்ஸ்ட்ரா கிஃப்டாக’ எடுத்துக் கொடுத்த ராஜ்ய பதவிக்கு கதர் பார்ட்டியில் ‘இன்னார்’ தான் வேட்பாளர் என செய்திகள் தூள் பறக்கும் நிலையில், வழக்கம்போல அவருக்கு எதிராக உள்குத்து பதிவுகளைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள் கதர் பார்ட்டி ‘கலாக்கார்கள்’.
என்ன காரணமோ தெரியவில்லை, அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஜே போடும் கூட்டத்தில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் படு தீவிரமாக இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் கர்மவீரரின் பெயர் கொண்ட ‘வனத்துக்காரர்’ ஒருவர், “தூங்கா நகர் அமைச்சர் உள்ளிட்ட அறிவாலயத்து மூத்த தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பதிவு செய்து கசியவிட்டவர்.
கதர் தலைமையின் வாரிசுகள் தொடர்பான ரகசியப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக தம்பட்டம் அடித்தவர். தனது சுயநலத்துக்காக விசில் கட்சியையும் மலர் கட்சியையும் கூட்டணி வண்டியில் ஏற்றப் பார்த்தவர். ஒன்றுக்கும் உதவாத ‘சத்தில்லாத செயலி’ ஒன்றை கட்சிக்காக உருவாக்கி அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர்.
இப்படிப்பட்ட மேனாமினுக்கி அரசியல்வாதிகளுக்கு ராஜ்ய பதவியை வழங்குவதற்குப் பதிலாக நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்த விசுவாசமுள்ள மூத்த கதர் தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்குங்கள்” என தலைமைக்கு யோசனை சொல்லி பதிவிட்டிருக்கிறார்.