தமிழகம்

கடலோர சமஸ்தான மாவட்டத்தில் விசில் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கடலோரத்து சமஸ்தான மாவட்டத்தில் விசில் கட்சியை இரண்டு மாவட்டமாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் ஈஸ்ட் மாவட்டத்துக்கு விழிக்கும் ‘மலர்’ பெண்மணியை மாவட்டச் செயலாளராகப் போட்டிருக்கிறார்கள். ஆனால், பேருக்குத்தான் அம்மணி மாவட்டச் செயலாளர். ஆக்டிங் எல்லாம் இவரின் ’ஜெயமான’ கண்ணாளர் தானாம்.

அரசு ஊழியரான ‘ஜெயமானவர்’ நீண்ட காலமாக சஸ்பென்ஸனில் இருக்கிறார். அதனால் தனக்குப் பதிலாக தனது பாரியாளை மா.செ. பதவியில் உட்காரவைத்துக் கொண்டு இவர் போடும் ஆட்டம் தாங்கமுடியவில்லையாம்.

தனக்குப் பதிலாக தனது பாரியாளை தேர்தலிலும் நிறுத்தினார். ஆனால், ஜெயிக்க முடியவில்லை. இருந்தும் அசராத அண்ணாச்சி, தேர்தல் முடிவுகள் வெளியான ரெண்டொரு நாளிலேயே பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, “என்னைக் கேட்காமல் எந்த ஃபைலையும் மூவ் பண்ண வேண்டாம்” என்று அதிகாரத் தோரணையுடன் கேட்டுக் கொண்டாராம்.

அத்தோடு நிற்காமல், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, “சார்... கம்ளைன்ட்ஸ் ஏதும் வந்தா எங்களைக் கேட்காம எஃப்ஐஆர் போட்டுடாதீங்க” என்றாராம். எதுவும் புரியாத கண்காணிப்பாளர், “எஃப்ஐஆர் போடுறதுக்கு உங்கள எதுக்குங்க கேக்கணும்?” என்று கேட்டாராம். “அதில்ல சார்... புகார் என்னன்னு தெரிஞ்சா நாங்க கொஞ்சம் பேசிப் பார்த்து பிரச்சினையை சரிபண்ணலாம்ல.

உங்களுக்கும் வேலை மிச்சம் பாருங்க” என்று வழிந்தாராம் திருவாளர் ‘ஜெயமானவர்’. இன்னமும் இவரின் இந்த அதிகாரத் தோரணை தொடருவதால், “என்னங்க இவிங்கிய... அதுக்குள்ள இந்த ஆட்டம் போடுறாய்ங்க” என்று சமஸ்தான மாவட்ட அரசு அதிகாரிகள் அலறிக்கொண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT