“அப்படியெல்லாம் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது” என தலைமை தடையுத்தரவு போட்டாலும் தவறுகளை தட்டிக்கேட்டு ரீல்ஸ் போடுவதற்காக விசில் தம்பிகள் மொபைல் கேமராவும் கையுமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படித்தான், ‘டர்னிங்’ ஊர் மாவட்டத் தலைநகர் தொகுதியின் பெருமாள் ஊர் பெயர் கொண்ட விசில் பார்ட்டி டாக்டர் எம்எல்ஏ-வானவர், அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு அதிரடி விசிட் நடத்தி ஆய்வு நடத்தினாராம். அண்ணன் இப்படியொரு ‘ஆக்ஷன்’ ரிப்போர்ட் எடுக்கப் போகிறார் என்றதுமே அவரது விசுவாசிகள், மருத்துவமனையின் அவலங்களை ‘அண்ணனிடம்’ சொல்லிப் புலம்புவதற்காக ஒரு சிலரை முன்கூட்டியே `செட் பண்ணி’ அங்கு அனுப்பி வைத்துவிட்டார்களாம்.
அதில் ஒரு பெண்மணி, எம்எல்ஏ ஆய்வை முடித்துத் திரும்பிய போது அவரது காலில் வந்து விழுந்து, தனது மகனுக்கு மருத்து - மாத்திரை கொடுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பதாகச் சொல்லி கதறியிருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்வது போல் `ஷூட்டை’ எடுத்து முடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார் எம்எல்ஏ.
அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டு குறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டால், “காலில் விழுந்து கதறுன அந்தம்மா எம்எல்ஏ-வோட சொந்த வார்டுக்காரங்க. அவங்க மகனுக்கு தேவையான மருந்துகள் எல்லாம் பாக்கி இல்லாம வாங்கிருக்காங்க. இருந்தாலும் கட்சிக்காரங்க சொன்னதைக் கேட்டு இப்படி பண்ணிருக்காங்க” என்று சொல்கிறார்கள்.