விசில் கட்சிக்குள் விசிட்டர் கணக்காய் திடீரென வந்து சேர்ந்த கீர்த்தனமானவர், சாதியப் பின்புலத்துடன் தேர்தலில் வென்று, மாண்புமிகு பட்டியலுக்குள்ளும் வந்துவிட்டார். இதனால், எங்கிருந்தோ வந்து தங்களுக்கான வாய்ப்பை பறித்துக் கொண்டதாக நினைத்து, கீர்த்தனமானவருடன் ஒட்டாமல் விலகியே நிற்கிறாராம் ‘அவார்டு’ நகர் விசில் பார்ட்டியின் ‘மாரியான’ மாவட்டச் செயலாளர்.
தனக்காக திருவாளர் ‘மாரி’ தேர்தல் பணி செய்யாததால் அவரது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தாமலேயே தேர்தல் பிரச்சாரம் செய்த கீர்த்தனமானவருக்கு அவரது ‘கட்டபொம்மன்’ சமூகத்து ஆட்கள், ‘நாங்க இருக்கோம் வாங்க’ என்ற கணக்காய் முழு ஆதரவு கொடுத்து அவரை ஜெயிக்க வைத்தார்களாம்.
குறிப்பாக, அந்த மாவட்டத்தில் இருக்கும் மூன்றெழுத்து கல்லூரியின் ‘சாமியான’ அதிபர், தேர்தல் செலவுக்காக பெருந்தொகை கொடுத்து உதவினாராம். அதனால், பதவியேற்று ஊருக்குத் திரும்பியதுமே கல்லூரிக்கே போய் ‘சாமி’ அதிபரைச் சந்தித்து சாஷ்டாங்கமாய் வணங்கி நன்றிக்கடன் செலுத்தினாராம் ‘கீர்த்தனம்’.
இதற்கு நடுவே, தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்களுக்கு விருந்தும் கொடுத்திருக்கிறார். அந்த விருந்துக்கு மாவட்டச் செயலாளரை அழைக்கவில்லையாம். இவரது இந்தப் போக்கால், மாவட்டத்தில் உள்ள மேலும் 2 விசில் பார்ட்டி எம்எல்ஏக்களும் இன்னொரு மாண்புமிகுவும் மாவட்டம் சொல்வதைக் கேட்பதா, கீர்த்தனம் சொல்வதை கேட்பதா என்று புரியாமல் கிறுகிறுத்துக் கிடக்கிறார்கள்.
இதற்கு நடுவே, கீர்த்தனமானவரின் கரத்தைப் பலப்படுத்த அவரது மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் ‘கட்டபொம்மன்’ சமூகத்து ஆட்கள் சிலர் விசில் பார்ட்டியில் சேர விண்ணப்பம் போடத் தயாராகி வருகிறார்களாம்.