தென்கோடியில் தேர்தல் களத்தில் நிற்கும் மாண்புமிகுவான ‘ராதையின் நாயகருக்கு’ எதிராக சூரியக் கட்சி தலைவருக்கு சுடச் சுட புகார்களை அடுக்கி இருக்கிறதாம் கதர் கட்சி. அந்த மாவட்டத்தின் ‘குண்டம்’ தொகுதியில் களத்தில் நிற்கும் ‘அமிர்தமான’ கதர் வேட்பாளருக்கும் ‘ராதையின் நாயகருக்கும்’ ரொம்ப நாட்களாகவே சரிப்பட்டு வரவில்லை. ‘அமிர்தம்’ மீண்டும் களம் கண்டால் அவரை தோற்கடிப்போம் என ‘ராதையின் நாயகரின்’ விசுவாச வட்டம் பொதுவெளியிலேயே பேசி வந்ததாம்.
இந்தத் தகவலை தேர்தலுக்கு முன்னதாகவே சூரியக் கட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு போனாராம் திருவாளர் ‘அமிர்தம்’. இது தொடர்பாக ‘ராதையின் நாயகரை’ அழைத்துப் பேசிய சூரியக் கட்சி தலைவர், “அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என எச்சரித்து அனுப்பினாராம். ஆனால், அப்படி இருந்தும் ‘ராதையின் நாயகர்’ தனது வேலையைக் காட்டிவிட்டாராம்.
தேர்தல் செலவுக்காக ‘அமிர்தத்துக்கு’ சூரியக்கட்சி தலைமை அனுப்பி வைத்த கரன்சிகளை உரியவிதத்தில் செலவழிக்காமல் உள்ளாடிவிட்டதாம் ‘ராதையின் நாயகர்’ தரப்பு. அத்துடன் தேர்தல் பணிகளிலும் ‘நாயகரின்’ பேச்சைக் கேட்டுக் கொண்டு சூரியக் கட்சியினர் சண்டித்தனம் பண்ணிவிட்டார்களாம்.
இதனிடையே, ‘அமிர்தத்தை’ எதிர்த்து நிற்கும் இலைக் கட்சியின் ‘நாதனுக்கு’ ராதையின் நாயகர் தரப்பிலிருந்து 15 ‘சி’ வரைக்கும் பணம் போனதாகவும் தகவல் பரவி இருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் லீக் ஆனதும், “அந்த ‘நாதனும்’ நம்ம ‘நாயகரும்’ தொழில் பார்ட்னர்களாக்கும்” என்று சொல்லி சமாளித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் நடுவில் ‘அமிர்தம்’ தனது சொந்த முயற்சியில் திரட்டிய பணம் தொடர்பாகவும் பறக்கும்படைக்கு ‘பக்குவமாக’ போட்டுக் கொடுத்து பறிமுதல் செய்ய வைத்துவிட்டதாம் ‘ராதையின் நாயகர்’ தரப்பு.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் பட்டியல் போட்டு சூரியக் கட்சி தலைவரிடம் சமர்ப்பித்து விட்டாராம் மிஸ்டர் ‘அமிர்தம்’. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ராதையின் நாயகர் ‘ஆலய’ பஞ்சாயத்துக்கு அழைக்கப்படலாம் என்கிறார்கள்.