வழக்கமாக மக்களவைத் தேர்தலில் லட்சத்துக்குக் குறையாத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றே பழகிப் போன கதர் கட்சியின் ‘சீமான்’ வேட்பாளர், 2009-ல் கடும் போட்டியை எதிர்கொண்டு சுமார் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார்.
அதை ஒரு வெற்றியாகவே எடுத்துக்கொள்ளாத ‘சீமான்’, “இனிமேல் எனக்காக மக்களிடம் வாக்குக் கேட்டு வரமாட்டேன்” என்று அறிவித்தார். இந்த நிமிடம் வரை அதில் உறுதியாக இருக்கும் திருவாளர் ‘சீமான்’, இம்முறை ‘குடி’ சட்டமன்றத் தொகுதியில் தனது விசுவாசிக்கு இரண்டாவது முறையாக சீட் வாங்கிக் கொடுத்து நிற்க வைத்திருக்கிறார்.
அங்கே களம் கடுமையாக இருப்பதால், தனது விசுவாசிக்காக, வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல் தெருவில் இறங்கி மக்களிடம் கைகூப்பி வாக்குச் சேகரித்து வருகிறார் ‘சீமான்’. கடந்த ஞாயிற்றுக் கிழமை இருபது பேரைக் கூட்டிக் கொண்டு அப்படி ‘சாலை வலம்’ போனவர், சும்மா போகாமல் வழியில் ஒரு கறிக் கடையில் போய், “ஐயா... மட்டன் என்ன விலைங்கய்யா?” என்று விசாரித்தாராம்.
அதற்கு அந்தக் கடைக்காரர் அதே மாடுலேஷனில், “ஐயா... இது மட்டன் கடை இல்லைங்கய்யா... பன்றிக் கறிக்கடை” என்று சொன்னாராம். இதைக் கேட்டுவிட்டு மறு வார்த்தை பேசமுடியாமல் அங்கிருந்து நகர்ந்தாராம் திருவாளர் ‘சீமான்.’