சூரியக் கட்சி குடும்பத்தின் ’தங்கை’ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இம்முறை மிகுந்த ஆவலுடன் இருந்தார். அவருக்காக அவரது விசுவாசிகள் விருப்ப மனு கொடுத்ததாகக் கூடச் சொன்னார்கள். ‘புறத்தை ஆண்டது போதும்... அகத்தை ஆள வா’ என அவரது விசுவாசிகள் பிறந்த நாளுக்கு கேக்கெல்லாம் வெட்டி அவருக்கு வடம் பிடித்தார்கள். அப்படி இருந்தும் ‘தங்கைக்கு’ சீட் கொடுக்கவில்லை தலைமை.
ஆனாலும், அவர் சிபாரிசு செய்த சிலருக்கு தென் மண்டலத்தில் சீட் கொடுத்திருக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேரவில்லை என்றால் அப்படியே அவர்களை ஓரங்கட்டி உட்காரவைப்பதற்கான ‘ஸ்கெட்சை’ சூரியக் குடும்பத்தின் ‘மாப்பிள்ளை சார்’ இப்போதே போட்டுவைத்து விட்டாராம்.
அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில், தென் மண்டலத்தில் ‘மாப்பிள்ளை சாரின்’ விசிட்டும் வியூகங்களும் இம்முறை அதிகமாக இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு ‘தங்கைக்கு’ பவர் குறைக்கப்படலாம் என்று பேசுகிறார்கள் தென் கோடி சூரியக் கட்சி பொறுப்பாளர்கள்.