தமிழகம்

‘பலாப் பழ’ தொகுதியில் தாமரைக் கட்சியின் களேபரம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கடல்’ மாவட்டத்தின் ‘பலாப் பழ’ தொகுதியில் இம்முறை தனக்கு தாமரைக் கட்சியில் சீட் கிடைக்கும் என ‘மவுன்ட் தலைவர்’ இருக்கும் தைரியத்தில் மலைபோல் நம்பிக் கொண்டிருந்தாராம் துரோணாச்சாரியாரின் துணிச்சலான மகன்.

இதற்காக கடந்த ஒரு வருட காலமாகவே அங்கே களப்பணியும் செய்து வந்தாராம். ஆனால், ‘மவுன்ட் தலைவரின்’ ஆதரவாளர்களை திட்டமிட்டு ஓரங்கட்டிய தமிழக தாமரைக் கட்சி தலைமை துரோணாச்சாரியாரின் மகனுக்கும் கைவிரித்துவிட்டதாம். ஏனென்று கேட்டதற்கு, “உங்களுக்கு ஏற்கெனவே மக்களவைத் தேர்தலில் சீட் கொடுத்தோம். உங்களால் ஜெயிக்க முடியவில்லையே” என பதில் சொன்னார்களாம்.

இதைக் கேட்டு, “மாம்பழக் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தால் போதுமா... நம்ம கட்சியில் வன்னியர் யாரும் ஜெயிக்க வேண்டாமா?” என்று சூடான துரோணாச்சாரியாரின் மகனின் ஆதரவாளர்கள், அவர் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக செய்திகளை கசியவிட்டார்களாம்.

“நீ சுயேச்சையாக களமிறங்கினால் நாங்கள் எல்லாம் உன் பின்னால் அணி வகுப்போம்” என்று துரோணரின் மகனது ஆதரவாளர்கள் போட்ட பதிவுகளைப் பார்த்துவிட்டு மிரண்டு போய் ஓடி வந்த ‘பலாப் பழ’ தொகுதியின் ‘மோகனமான’ இலைக் கட்சி வேட்பாளர், சாரியார் மகனை சாதுர்யமாகப் பேசி சமாதானம் செய்தாராம். ஆனால், இது விஷயமாக சொந்தக் கட்சி தரப்பிலிருந்து யாருமே துரோணாச்சாரியார் மகனிடம் விசாரிக்கக் கூட தயாரில்லையாம். தேர்தல் முடியட்டும் எனக் காத்திருக்கிறதாம் துரோணர் மகனின் விசுவாச வட்டம்.

SCROLL FOR NEXT