‘அவார்டு’ மாவட்டத்தில் உள்ள ‘கோட்டை’ தொகுயில் இம்முறை இலைக் கட்சியில் போட்டியிட ஆளே கிடைக்கவில்லையாம். அந்தக் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்ற ‘ரிவர்’ செல்வனையே இம்முறையும் நிற்கச் சொன்னாராம் எடக்கானவர்.
ஆனால், “தோல்விச் சரித்திரத்தையே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் செலவுகளை கவனிப்பதாக இருந்தால் நான் அங்கே நிற்கிறேன். இல்லாவிட்டால் என்னை விட்டுவிடுங்கள்” என்று சொன்ன மிஸ்டர் ‘ரிவர்’, “தூங்கா நகரின் தெற்கை கொடுக்கலாமா?” என்று கேட்டாராம்.
“அங்கே தாமரை நிற்கிறது. வேண்டுமானால், ஹனிபீ மாவட்டத்தில் நிற்கிறீர்களா... அங்கே உங்காளுங்க 30 - 40 ஆயிரம் பேர் இருக்காங்க” என்று தர்மயுத்த நாயகரின் தொகுதியை குறிப்பிட்டுச் சொன்னாராம் எடக்கானவர். அதற்கு “நரியூருக்குப் பயந்து புலியூருக்குப் போகச் சொல்றீங்களாண்ணே” என்று கேட்ட ‘ரிவர்’ செல்வன், “தப்பா நினைச்சுக்க வேண்டாம்.
இந்தத் தேர்தல்ல நான் போட்டியிடும் மன நிலையில் இல்லை” என்று சொல்லிவிட்டாராம். "இப்பெல்லாம் காசுக்குத்தான் மரியாதை இருக்கு. கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லாமப் போச்சு " என்று புலம்பிக் கொண்டிருக்கிறதாம், 'ரிவரின் ' விசுவாச வட்டாரம்.