கடலோர மாவட்டத்தில் உள்ள ‘குளத்தூர்’ தொகுதியில் அந்த மாவட்டத்தின் இலைக் கட்சி செயல் புள்ளியின் ‘கீர்த்தியான’ மனைவி கடந்த இரண்டு தேர்தல்களாக போட்டியிட்டு கரை சேரமுடியாமல் போய்விட்டார். இம்முறையும் அங்கே சூரியக் கட்சியின் ‘கண்ணான’ மாண்புமிகுவே களமிறங்குவார் என கணிக்கப்படுவதால் ‘கீர்த்தி’ அம்மணி மறுபடியும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லையாம்.
அதனால் அத்தானிடம் சொல்லி தனக்காக ’ஆடானை’ தொகுதியை ரெடி பண்ணச் சொன்னாராம். சம்பந்தா சம்பந்தமில்லாமல் அங்கே போய் நின்றால் சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘சோதனைகளை’ கொடுப்பார்களே என யோசித்த ‘கீர்த்தி’ அம்மணியின் அத்தானானவர், ‘ஆடானை’ தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட முத்தான நபர் உள்ளிட்ட அத்தனை பேரையும் ‘சத்தாக’ கவனிப்பதாக இப்போதே பேசி வருகிறாராம்.
வந்தேறிகளுக்கு வாய்ப்பளிக்கும் ‘ஆடானை’ தொகுதியில் தலைக்கு ஆயிரமாவது கொடுத்தால் தான் சாதிக்க முடியும் என்ற யோசனையையும் ‘கீர்த்தி’ பெண்மணியின் கெத்தான அத்தானிடம் அங்குள்ள நிர்வாகிகள் முன்னேற்பாடாகச் சொல்லி விட்டார்களாம். இதையடுத்து, வாக்காளர் பட்டியல்படி தலா ஆயிரம் ரூபாய் வீதம் கச்சிதமாக கவர்கள் ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்.
இந்த கவர்களை கட்சிக்காரர்கள் கையில் கொடுத்தால் ‘காரியத்தை’ கெடுத்துவிடுவார்கள் என்பதால் ஏஜென்ஸிகாரர்கள் மூலம் பட்டுவாடா செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் ‘கீர்த்தி’ பெண்மணியின் கெட்டிக்கார அத்தான்.
இலைக் கட்சியில் இப்படி எல்லாம் நடப்பதை உளவறிந்து, கதர் கட்சியில் கடந்த முறை தனக்குப் பதிலாக தனது புத்திரசிகாமணியை நிறுத்தி ஜெயிக்க வைத்த ‘சாமியானவர்’ இம்முறை, தானே மீண்டும் களமிறங்கிவிடலாமா என தீவிர ஆலோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.