சூரியக் கூட்டணியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை ஜவ்வாக இழுத்துக் கொண்டே இருந்த கூட்டணிக் கட்சி ‘நண்பரை’ கமுக்கமாக பேசிமுடிக்கும் பொறுப்பை டெல்லி போக்குவரத்தில் இருக்கும் ‘கப்பல்’ தலைவரிடம் ஒப்படைத்திருந்தாராம் கட்சி தலைவர். ஆனால், அவர் பேசி எதுவும் ஓடியடையவில்லையாம். அடுத்ததாக ‘படிப்பு’ மாண்புமிகுவை அனுப்பிப் பேசச் சொன்னாராம்.
எதையும் தடாலடியாக பேசிமுடிக்கும் ‘படிப்பு’ மாண்புமிகு, கூட்டணிக் கட்சி ‘நண்பருக்கு’ வாட்ஸ் அப் காலில் போன் போட்டு பேசினாராம். அவரிடமும் ‘சுயமரியாதை’ அது இது என வசனம் பேசினாராம் ‘நண்பர்’. இடைமறித்த ‘மிஸ்டர் படிப்பு’ “அதெல்லாம் இருக்கட்டும்ணே... சென்னையில ‘3 சி’ மதிப்புல வீடு ரெடியா இருக்கு. நம்ம வீட்ல யார் பேருக்கு மாத்தணும்னு சொல்லுங்க. இல்ல வீடு வேணாம்னா... அதுக்கான அமவுன்ட் அடுத்த ஒரு மணி நேரத்துல நீங்க சொல்ற இடத்துல இருக்கும்” என்றாராம்.
இதைக் கேட்டு முகம் சிவந்த ‘நண்பர்’, “எல்லார் கிட்டயும் பேசுறாப்ல எங்கிட்ட பேசாதீங்க” என்று சொல்ல, “அண்ணே இப்ப நான் உங்க வீட்டு வாசல்ல நிக்கிறேன்... உள்ள வரட்டுமா போகட்டுமா?” என்று ‘மிஸ்டர் படிப்பு’ சொல்லவும் மிரண்டே போய்விட்டாராம் கூட்டணி ‘நண்பர்’. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. அன்றைய தினம் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், “நாம் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. அதுக்காக கூட்டணியை விட்டு வெளியில் வந்தோம்னா இப்ப நமக்கு கிடைக்கிற இந்த ஒற்றை இலக்கத் தொகுதிகளில் ‘அஞ்சாமல்’ ஜெயிக்கிறது நிச்சயமில்லை” என்று ‘நண்பர்’ டச்சிங்காக பேசினாராம்.
வெளியில் நடந்த ‘டீலிங்’ பற்றி எதுவுமே தெரியாத மற்ற ‘நண்பர்கள்’, “குட்டையோ நெட்டையோ பேசிமுடிங்க நண்பரே” என்று ஒருமித்து குரல் கொடுத்தார்களாம். அதன் பிறகே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு தோள் துண்டை சரி செய்து கொண்டாராம் கூட்டணிக் கட்சி ‘நண்பர்’.