‘‘எங்கள மன்னிச்சு ஏத்துக்கோங்க” என்று சூரியக் கட்சி தலைமைக்கு மனு மீது மனுவாய் போட்டு களைத்துப் போன மீனாட்சிப் பட்டணத்தின் ‘கிங்’ பிரமுகர், அண்மையில் ஆர்ப்பாட்டமாக வந்து இலைக் கட்சியில் சேர்ந்தார். தனது அரசியல் ஆசான் ‘அஞ்சா நெஞ்சரின்’ அனுமதி பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்தாராம் மிஸ்டர் ‘கிங்’.
இந்த நிலையில், அவருக்கு சூரியக் கட்சியின் ‘கீர்த்தி’யான மதுரை மாண்புமிகுவை எதிர்த்து நிற்கச் சொல்லி இலைக் கட்சியின் ‘தெர்மாகோல் சைன்டிஸ்ட்’ வந்ததுமே தெம்பு கொடுத்தாராம். ஆனால், ‘கீர்த்தியாரை’ எதிர்த்து நின்றால் சாதி ரீதியாக சமாளிக்க முடியாது என்பதால், மீனாட்சி பட்டணத்தின் ’மையத்’ தொகுதியில் வேண்டுமானால் போட்டுப் பார்க்கலாம் என தனது விருப்பத்தைச் சொன்னாராம் திருவாளர் ‘கிங்’.
‘மையத்’ தொகுதியானது இப்போது ‘டெக்னாலஜி’ மாண்புமிகு வசம் இருக்கிறது. ‘கீர்த்தியாரை’ விட இவரை சமாளிப்பது எளிது என்பதால் ‘மையத்’ தொகுதி மீது மையல் கொள்கிறாராம் ‘கிங்’. அதற்காக, இந்தத் தொகுதியில் முன்பு இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ‘பாட்சா’வையும் தங்கள் பக்கம் இழுக்க பிளான் போடுகிறதாம் ‘கிங்’ தரப்பு.
ஆனால், “அங்கே தாமரைக் கட்சி இருக்கேன்னு தான் ஒரே யோசனையா இருக்கு” என்று இழுக்கிறாராம் ‘பாட்சா’. அதற்கு, “தாமரை இருந்தா என்ன... நீங்க வரப்போறது இலைக் கட்சிக்குத் தானே” என்று குளிர் வசனம் பேசி அவரை கூல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களாம். இவரோடு சேர்ந்து ‘அஞ்சா நெஞ்சரின்’ அன்பு வட்டத்துக்குள் இருக்கும் இன்னும் சிலரையும் இலை கம்பெனிக்கு இழுக்க பிளான் போடுகிறதாம் ‘கிங்’ தரப்பு.