தமிழகம்

விசில் கட்சியும் ‘3சி’ கல்லா பெட்டியும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

விசில் கட்சி தலைவர் யாருக்காகவும் காத்திருக்காமல் வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கிவிட்டார். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் ‘மகிழ்ச்சி’ பிரமுகர், “தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் ‘3 சி’ கொடுத்தால் தான் வேலை நடக்கும்” என்று சொல்லி கல்லாப் பெட்டியை திறந்து வைத்திருக்கிறாராம். இதனால் அப்செட்டில் இருக்கும் மன்றத்து நிர்வாகிகள், “இத்தனை நாளும் நாங்க போஸ்டர் ஒட்டி புகழ்பாடி இருக்கோம்.

அதையெல்லாம் கணக்கில் வைக்காம, ‘மாற்று அரசியலை தருவோம்’னு சொல்லிட்டு நீங்களும் சீட்டுக்கு காசு கேக்குறீங்களே... இது நியாயமா?” என்று கொந்தளிக்கிறார்களாம். ஆனாலும், “இந்த வசனமெல்லாம் இங்க பேசாதீங்க... கையில பணம் இருந்தா பேசுங்க” என்று கட் அண்ட் ரைட்டாகப் பேசுகிறாராம் திருவாளர் ‘மகிழ்ச்சி’.

          

அதேசமயம், பலனை எதிர்பார்த்து கட்சிக்கு வந்த சிலர், அவர் கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்து தங்களுக்கான இடத்தை ரிசர்வ் செய்து வருகிறார்களாம். இதனிடையே, இலைக் கட்சியிலிருந்து வந்த ’கோட்டையன்’ தலைவர், தனது தரப்பில் தனது மண்டலத்தைச் சேர்ந்த 10 பேருக்கு சீட் கொடுக்க வேண்டும் என பட்டியல் நீட்டினாராம்.

அவருக்கும், ‘கல்லாப்பெட்டி’ கணக்கைச் சொன்ன மிஸ்டர் ‘மகிழ்ச்சி’, “வேணும்னா ரெண்டு பேருக்கிட்ட பணம் வாங்காம சீட் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். பாக்கி 8 பேருக்கிட்ட பணத்தை வாங்கிக் கட்டிருங்க” என்று சொல்லிவிட்டாராம். இதைக் கேட்டு ‘கோட்டையனும்’ கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அநேகமாக விசில் கட்சியில் சீட்டுக்கு நோட்டுக் கேட்கும் விவகாரம் அடுத்த சில நாட்களில் பெரும் புயலைக் கிளப்பலாம்.

SCROLL FOR NEXT