சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல் சித்தாந்தம் மற்றும் மத ரீதியிலான நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசியல் சித்தாந்தம் மற்றும் கொள்கை ரீதியாகவும், மத ரீதியாகவும் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
மேலும், இந்த உத்தரவு கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்படும் என ஆண்டுதோறும் ஏப்.30-ம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசி்ன் இந்த உத்தரவை எதிர்த்து வேலூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்ரீ காமராஜ் வித்யாலயா தொடக்கப் பள்ளிகள் சார்பி்ல் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், “தமிழக அரசின் உத்தரவு அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. சட்டவிரோதமானதும்கூட. பள்ளி விடுமுறை நாட்களிலும், பள்ளி நேரம் முடிந்தபிறகும் தனியார் சார்பில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது.
அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல என்பதால் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மத ரீதியிலான நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற அரசி்ன் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக ஆண்டுதோறும் ஏப்.30-க்குள் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்ற அரசின் உத்தரவுக்கு மட்டும் இடைக்காலத்தடை விதித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.