நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்தவரின் கன்னத்தில் போலீஸ்காரர், ‘பளார்’ விட்ட காட்சி.
பொன்னேரி: எண்ணூர் அருகே எர்ணாவூரில் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் கன்னத்தில் போலீஸ்காரர், ‘பளார்’ விட்ட காணொலி காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை, எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 3 தினங்களுக்கு முன்பு, தன் நண்பர் ஒருவரின் பைக்கில் எர்ணாவூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அந்த பைக் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த எண்ணூர் காவல்நிலைய போலீஸார் இருவர், அந்த இளை ஞரை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் நம்பர் பிளேட் இல்லாதது குறித்து, இளைஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, அந்த இளைஞர், ‘என் நண்பரின் பைக்’ என்று பதில் அளித்தார்.
பதிலில் திருப்தியடையாத போலீஸார், பைக்கின் ஆவணங்களுடன் நண்பரை காவல் நிலையத்துக்கு அழைத்து வாருங்கள் என்று கூறி, இளைஞர் ஓட்டி வந்தபைக்கை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு எடுத்து செல்ல முயன்றனர்.
அதனை ஏற்காத இளைஞர், என் நண்பரை இங்கே வர சொல்கிறேன். காவல் நிலையத்துக்கு அழைத்து வர முடியாது எனக்கூறி, பைக்கை காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லவிடாமல் தடுத்து, தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், கோபமடைந்த இரு போலீஸாரில் ஒருவர், இளைஞரின் கன்னத்தில் பளார் விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த இளைஞர், போலீஸாரிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகளை அங்கு நின்ற சிலர், தங்கள் மொபைல் போன்களில் காணொலியாக பதிவு செய்ததாக தெரிகிறது.
தொடர்ந்து, இளைஞர் ஓட்டி வந்த பைக்கின் உரிமையாளர், போலீஸாரை சந்தித்து, ஆவணங்களை காண்பித்ததோடு, நம்பர் பிளேட் பொருத்தாதற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் பைக்கை போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த இளைஞரின் கன்னத்தில் போலீஸ்காரர் பளார் விட்ட காணொலி காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.