எல்.முருகன் தடுத்து நிறுத்தம்
கோவை: திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்டு முகாம் அலுவலகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டார். அதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் இந்து இயக்க நிர்வாகிகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினமான இன்று (நவ.24) மாலை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டது. இதையடுத்து கோவையில் இருந்து பாஜக, இந்து முன்னணி இயக்க தலைவர்கள் திருப்பரங்குன்றம் செல்ல திட்டமிட்டனர்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பதற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக, இந்து இயக்க மூத்த நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் காவல் துறையினரால் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சாயிபாபாகாலனியில் வசிக்கும் இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் குணா, ரத்தினபுரியில் வசிக்கும் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சி.தனபால் ஆகியோர் திருப்பரங்குன்றம் செல்ல ஆயத்தமாகினர்.
இதையறிந்த சாயிபாபாகாலனி மற்றும் ரத்தினபுரி போலீஸார் நேற்று (நவ.23) நள்ளிரவு 3 மணிக்கு மேற்கண்டவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்கள் வெளியே செல்ல தடைவிதித்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
அதேபோல், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத், செல்வபுரத்தில் மாநில செயலாளர் சூர்யா, சரவணம்பட்டியில் பாரத்சேனா நிறுவன தலைவர் செந்தில்கண்ணன் உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் தங்கியிருந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (நவ.24) திருப்பரங்குன்றத்துக்கு செல்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் காரில் புறப்பட்டார்.
அன்னூர் அருகே சென்றபோது அவரை காரை மாவட்ட போலீஸார் தடுத்து நிறுத்தினர். திருப்பரங்குன்றத்துக்கு அவர் செல்ல தடை விதித்தனர்.
இதனால் போலீஸாருக்கும், எல்.முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... போலீஸார் அராஜகம் ஒழிக..’ என்ற கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பின்னர், எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது முகாம் அலுவலகத்துக்கு திரும்பினார்.