செந்தில் பாலாஜி | கோப்புப்படம் 
தமிழகம்

செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு மீது விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: ​​டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் முறை​கேடு வழக்​கில், முன்​னாள்அமைச்​சர் செந்​தில் பாலாஜி தாக்​கல் செய்த முன்​ஜாமீன் மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. தலைமறை​வான செந்​தில் பாலாஜியைப் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

முந்​தைய திமுக ஆட்​சி​யில் டாஸ்​மாக் மது​பான கொள்​முதல் உட்பட பல வழிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதன் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.​வி​சாகன், டாஸ்​மாக் முன்​னாள் மண்டல முது​நிலை மேலா​ளர்​கள் டி.​ராமதுரை முரு​கன், ஆர்​.பன்​னீர்​செல்​வம், செந்​தில் பாலாஜி​யின் முன்​னாள் நேர்​முக உதவி​யாளர் பாஸ்​கர், செந்​தில் பாலாஜி​யின் நண்​பர்​கள் ரத்​தேஷ் ராஜ், மூலனூர் கார்த்​திக் ஆகிய 7 பேர் மீது கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்​குப் பதிவு செய்​யப்பட்டுள்ளது.

இந்த வழக்​கில் முன்​ஜாமீன் கோரி செந்​தில் பாலாஜி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்​கோ, ‘‘கடந்த ஆட்​சி​யில் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், விசா​ரணை நடத்த உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது.

குதிரை பேர வழக்​கில் உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி செந்​தில் பாலாஜி முறை​யாகத் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் முன்​பாக ஆஜராகி வரு​கிறார். வாகன டெண்​டர் மற்​றும் காலி மது​பாட்​டில்​கள் சேகரிப்​பில் அவருக்கு எந்​தத் தொடர்​பும் இல்​லை. அரசி​யல் ரீதி​யாக பழி​வாங்​கும் நோக்​கில் போலீ​ஸார் இந்த வழக்​கைப் பதிவு செய்​துள்​ளனர். இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜியைக் கைது செய்ய எந்த அவசி​ய​மும் இல்​லை. எனவே முன்​ஜாமீன் வழங்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார்.

இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்து அரசு தரப்​பில் ஆஜரான மாநில தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன் வாதாடிய​தாவது: டாஸ்​மாக் நிர்​வாகத்​தில் கடந்த ஆட்​சி​யில் நடந்த ஊழல் மற்​றும் முறை​கேடு​கள் மொத்​த​மாக மறைக்​கப்​பட்​டுள்​ளன.

அமலாக்​கத் துறை சோதனை நடத்தி ஊழல் தொடர்​பான முக்​கிய ஆதா​ரங்​களை​யும், ஆவணங்​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளனர். இந்த முறை​கேடு​களுக்​கும், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களுக்​கும் உள்ள தொடர்பு குறித்து முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் விசாகன் தெள்​ளத் தெளி​வாக அமலாக்​கத் துறை​யிடம் வாக்​குமூலம் அளித்​துள்​ளார்.

மூடப்பட்டதாக கூறிய பார்கள் மூலம் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. போக்​கு​வரத்து டெண்​டரில் ரூ.100 கோடி ஒதுக்​கப்​பட்​டு முறை​ கேடு நடந்​துள்​ளது. பழைய மற்​றும் பயன்​படுத்​தப்​பட்ட பாட்​டில்​களை மது​பான ஆலைகளுக்கு வழங்​கிய​தில் ரூ.143 கோடி முறை​கே​டாக கையாளப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாகச் செந்​தில் பாலாஜி​யிடம் விரி​வாக விசா​ரணை நடத்த வேண்​டி​யுள்​ளது. எனவே அவருக்கு முன்​ஜாமீன் வழங்​கக் கூடாது. இவ்​வாறு வழக்​கறிஞர் ஜான் சத்​யன் வாதிட்​டார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, ‘‘முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​பட்​டதற்​கு முகாந்​திரம் உள்​ளது. செந்​தில் பாலாஜி மீதான குற்​றச்​சாட்​டு​கள் தீவிர​மானவை. இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜியைப் போலீஸ் காவலில் வைத்து விசா​ரிப்​பதும் அவசி​யம். எனவே, முன்​ஜாமீன் மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது’’ என்று உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதை அவசர வழக்​காகக் கருதி விசா​ரணைக்கு எடுக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் முன்​னிலை​யில் செந்​தில் பாலாஜி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் கபில் சிபல் மற்​றும் முகுல் ரோத்​தஹி ஆகியோர் முறை​யிட்​டனர். இதை ஏற்​றுக் கொண்ட தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், வழக்கை இன்று விசா​ரணைக்கு பட்​டியலிடு​வ​தாக உறு​தி​யளித்​தார்.

தலைமறைவு? - தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்பட ரூ.35 கோடி குதிரை பேரம் நடந்​த​தாக கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா புகார் அளித்​திருந்​தார். இந்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் 14 பேரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமாரும் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றனர். எனினும், இரு​வரும் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் தின​மும் காலை 10:30 மணி, மாலை 5:30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும் என்று நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.

அதன்​படி, செந்​தில் பாலாஜி, அசோக்​கு​மார் இரு​வரும் போலீஸ் நிலை​யத்​தில் கையெழுத்​திட்டு வந்​தனர். செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் மாலை கூட திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்​டார். ஆனால், டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் சென்னை உயர் நீதி​மன்​றம் முன்​ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்த பிறகு நேற்று காலை திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் செந்​தில் பாலாஜி ஆஜராக​வில்​லை. அவர் டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் கைது செய்​யப்​படு​வதை தவிர்க்க தலைமறை​வான​தாக தகவல் வெளி​யானது.

ஆனால், வழக்​கம் போல் திரு​வல்​லிக்​கேணி போலீஸ் நிலை​யத்​தில் கையெழுத்​திட வந்த அவரது தம்பி அசோக்​கு​மார், ‘‘சகோ​தரர் செந்​தில் பாலாஜிக்கு உடல்​நிலை சரியில்​லை. அத​னால்​ மருத்​துவமனை சென்​றுள்​ளார்​’’ என்​று தெரிவித்​தார்​. ஆ​னால்​, எந்​த மருத்​துவமனை என்​ற விவரத்​தை தெரிவிக்​கவில்​லை. எனினும்​, போலீஸார்​ இதை மறுத்​தனர்​. இத​னால்​, செந்​தில்​ ​பாலாஜி தலைமறை​வாகி விட்​ட​தாக முடிவுக்​கு வந்​த போலீஸார்​ அவரை தனிப்​படை அமைத்​து தேடி வருகின்​றனர்​.

இந்​நிலை​யில், செந்​தில் பாலாஜி மேல்​முறை​யீடு மனுவை விசா​ரிக்​கும் போது, தங்​களது தரப்பு கருத்​தைக் கேட்​காமல் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​கக் கூடாது என்று கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு லஞ்ச ஒழிப்​புத் துறை சார்​பில் வழக்​கறிஞர் விருந்தா பண்​டாரி கேவியட் மனு தாக்​கல் செய்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT