அப்பாஸ்,நிஜாமுதீன்,ஷேக் பரீத்
பழநி: கொடைக்கானல் சாலையில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, விபத்துகளை தடுக்க ஆபத்தான வளைவுகள் நிறைந்த இச்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்க போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பழநி மதினா நகரைச் சேர்ந்த பூ வியாபாரி முஜிபுர் ரகுமான். இவரது மகளுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கியில் மறுவீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முஜிபுர் ரகுமான், தனது உறவினர்களுடன் வேனில் பழநிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை புது ஆயக்குடியைச் சேர்ந்த சிலம்பரசன் (40) ஓட்டினார்.
இரவில் கொடைக்கானல் - பழநி மலைப் பாதையில் சவரிக்காடு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நிஜாமுதீன் (60), ஷேக் பரீத் (27), அப்பாஸ் (65) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வேன் ஓட்டுநரின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததும் முக்கிய காரணமாக தெரியவந்துள்ளது.
கொடைக்கானலுக்குச் செல்ல வத்தலக்குண்டு மற்றும் பழநி மார்க்கமாக இரு பாதைகள் உள்ளன. இதில், பழநி வழியாக கொடைக்கானலுக்குச் செல்லும் மலைச் சாலையில் அதிக அளவில் அபாயகரமான வளைவுகள், பள்ளத்தாக்குகள் உள்ளன. எனவே, இந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் இரவில் சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படும். இரவு நேரத்தில் புதிதாக பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வார விடுமுறை நாட்களில் ஆபத்தை உணராமல் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா வாகனங்கள் இந்த வழியாகச் செல்கின்றன. நேற்று முன்தினம் நடந்த விபத்தைபோல், மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் பழநி - கொடைக்கானல் சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பாதையில் அத்தியாவசிய, அவசரத் தேவைக்கான வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என திர்பார்க்கப்படுகிறது.