சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்த தாம்பரம் காவல் ஆணையர் சஞ்சய் குமார். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் விஜய் வீடு மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. தொடக்கம் முதலே விஜய்-யின் தவெக முன்னிலையில் இருந்து வந்தது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி தவெக அதிக வாக்குகளைப் பெற்று பல தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் திரண்டு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலும் ஏராளமானோர் கூடி உற்சாக மிகுதியில் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, இரு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக நீலாங்கரையில் வீட்டு நுழைவாயிலில் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் வைக்கப்பட்டது. அதேபோல், துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
விஜய்யின் நீலாங்கரை வீட்டைச் சுற்றி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு தாம்பரம் போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, விஜய் வீட்டு முன் உயர் போலீஸ் அதிகாரிகளும் திரண்டனர்.