சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வரிடம் பதக்கம் பெற்ற ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், ராதிகா, லோகநாதன்.
சென்னை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், போலீஸாருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில், மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமை தாங்கி பாராட்டுகளை பெற்றார். ஆண் காவலர்களும் பல்வேறு வகையான சாகசங்களில் ஈடுபட்டு கைதட்டுகளை குவித்தனர்.
50-க்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கிகளை கையில் சுழற்றியபடி இங்கும், அங்குமாக சென்று பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றனர். ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் பின்னணியில் முதல்வர் நடித்த விஜய் திரைப்படங்களின் பாடல்கள் ஒலித்தன.
விழாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் அன்பரசி. படங்கள்: எஸ்.சத்தியசீலன்
நிகழ்ச்சி முடிந்து முதல்வர் புறப்பட்டு சென்ற உடன் பதக்கம் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களுடன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போட்டோ, செல்பி, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக நிகழ்ச்சி நடைபெற்ற ராஜரத்தினம் அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர்கள் சக்திவேல், ராமமூர்த்தி, பதக்கம் பெற்ற கூடுதல் துணை ஆணையர் சங்கரலிங்கம். ஆவடி நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மணிவண்ணன். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன்.
நிகழ்ச்சியை ஆங்காங்கே காணும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது. அதில், முதல்வர் முகம் காண்பிக்கும்போதெல்லாம் அனைவரும் உற்சாக கோஷமிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி தினகரன் சிறப்பாக செய்திருந்தார்.
பதக்கம் பெற்றவர்கள் ஏமாற்றம்
பதக்கம் பெறுபவர்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் அவரது கைகளாலேயே பதக்கங்களை வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த காட்சிகளை காணவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்தனர்.
ஆனால், 72 பேருக்கு மட்டுமே முதல்வர் பதக்கம் கொடுத்தார். முதல்வர் கையால் பதக்கம் பெற முடியாத வருத்தம், ஏமாற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், விழாவில் முதல்வரைப் பார்த்த மகிழ்ச்சியை போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் காண முடிந்தது.