நீட் முறைகேடு தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் திரளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் கூட்டத்தை திரட்டி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.
இதையடுத்து நேற்று மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 2 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 300 போலீஸார் மெரினா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காமராஜர் சாலை, கடற்கரைக்குள் செல்லும் நுழைவுவாயில்கள் மற்றும் முக்கியசந்திப்புகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
நேற்று காலை முதலே மெரினா கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. யாரையும் போலீஸார் கடற்கரைப் பகுதிக்கு அனுமதிக்கவில்லை. மாலை நேரத்தில் பொழுதுபோக்க சுற்றுலா பயணிகள், வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்ததால், தீவிர சோதனைக்குப் பிறகு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல அவர்களை போலீஸார் அனுமதித்தனர்.
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தீவிரசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
போராட்டக்காரர்கள் கூட்டமாக மெரினா கடற்கரைப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, மாநில சைபர் க்ரைம் போலீஸாரும் வாட்ஸ்-அப், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து திடீர் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனால், மெரினா கடற்கரைப் பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் போலீஸார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.