சென்னை: தீபாவளி கொலைகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளியன்று தமிழகம் முழுவதும் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக நவ.9, 10 ஆகிய தேதிகளில் தமிழக காவல் துறை, மாநிலம் தழுவிய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது 15,000-க்கும் மேற்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைத் தகர்த்தல் மற்றும் பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த 48 மணி நேர நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பலர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை:
மாநிலம் முழுவதும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல் துறையினர் வழக்கமான குற்றவாளிகளைக் குறிவைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து சோதனை செய்தனர். இதன் விளைவாக, 443 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 796 தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது நன்னடத்தை உறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை:
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கொடுங்குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சமரசமற்ற வகையில், தமிழ்நாடு காவல் துறை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தீவிர சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சிறப்பு நடவடிக்கையின் போது, மாநிலம் முழுவதும் 1,624 போதைப்பொருள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மீது கண்காணிப்பு:
பழிவாங்கும் நோக்கிலான குற்றங்களைத் தடுத்து, பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், கொலை மற்றும் காயம் ஏற்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடைய, சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர்கள் உட்பட 2,924 குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் 163 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை:
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புறச் சாலைகளில் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு இந்தச் சிறப்பு நடவடிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை:
தீவிர வாகனச் சோதனைகளின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 2,865 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகளும் , 1,243 அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய வழக்குகளும், 998 நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு:
குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி திறந்தவெளிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில், பொது இடங்களில் மது அருந்தியதற்காக 1,859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 195 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.
உளவுத்துறை கண்காணிப்பு:
குற்றசம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் முறியடிப்பதற்கும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும், சிறப்புப் பிரிவுகள் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. ஆழமாக வேரூன்றிய குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடைய 1,057 குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு முன்பாகவே காவல் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.
பிடியாணைகளை நிறைவேற்றுதல்:
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில், தலைமறைவாக இருந்த அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்காத குற்றவாளிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட 73 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள், இந்த இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையின்போது நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு காவல் துறை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், சமூக அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.
பொது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு சமூக விரோத சக்திகளுக்கும் எதிராகவும், இதுபோன்ற தீவிரமான, முன்னெச்சரிக்கை அடிப்படையிலான திடீர் சோதனை மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.