சென்னை: தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சென்னை காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்’ என சென்னை காவல் துறை தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், போலீஸார், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவ வீரர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சென்னை காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு வரும் 26-ம் தேதிக்குள் தங்களின் பெயர், முகவரியை பதிவு செய்துகொள்ளவும்.
தேர்தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் ஊதியம் பெற்றுத் தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் சென்னை வடக்கு மண்டல ஆய்வாளர் ஆனந்த் 9498145519, மேற்கு மண்டல ஆய்வாளர் சாந்தினி தேவி 9840106030, கிழக்கு மண்டல ஆய்வாளர் பத்மகுமாரி 9498197388, தெற்கு மண்டல ஆய்வாளர் துர்கா தேவி 9498003162 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.